கோலாலம்பூர், அக்டோபர் 14 – கோலாலம்பூர், சௌகிட்டில் இயங்கி வந்த புத்ரா பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டத்தோ லோக பாலமோகன் (படம்) தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் அப்பேருந்து நிலையத்தில் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும், அங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்றும், அவர் கூறினார். பேருந்து நிலையத்திற்கு வெளியே பயணச்சீட்டுகள் மட்டும் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
“மாநகர மன்றம் இது தொடர்பாக தரைவழி பொதுப் போக்குவரத்து ஆணையத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற உடன்படிக்கை கண்டுள்ளது,” என்று நாடாளுன்றத்தில் பாஸ் கட்சி உறுப்பினர் அகமட் பைஹாகி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் லோக பாலமோகன் தெரிவித்தார்.
புத்ரா பேருந்து நிலைய கட்டடமும் அங்குள்ள வசதிகளும் மிகவும் பழமையாகிவிட்டதால், அக்கட்டடம் சீரமைக்கப்படுமா? என்று அகமட் பைஹாகி கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த லோக பாலமோகன், பேருந்து நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்படும் வரை அங்குள்ள கழிவறை, விளக்குகள், பிரார்த்தனை அறைகள் ஆகியவற்றுக்கான அடிப்படை பராமரிப்புப் பணிகள் மட்டும் நீடிக்கும் என்றார்.
எனினும் பேருந்து நிலையம் எங்கு அமைக்கப்படும் என்பது தமக்குத் தெரியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதிகளுக்கு புத்ரா பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.