நியூயார்க், அக்டோபர் 16 – உலக அளவில் கடும் அச்சறுத்தலை ஏற்படுத்தி வரும் உயிர்கொல்லி நோயான எபோலாவின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, நட்பு ஊடகமான பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஆகிய இருவரும் சுமார் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதி உதவியாக அளித்துள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள லைபீரியா, சியர்ரா, லியோனில் ஆகிய நாடுகளில் பரவிய எபோலா நோய்க்கு, இதுவரை சுமார் 4,000 பேர் பலியாகியுள்ளனர். உயிர்ப் பலிகள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான நோய்த் தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்த நூற்றாண்டின் மனித குல அழிவிற்கான மிகப்பெரும் நோய் தாக்குதல் இதுவென, உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளுக்கு பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், நோயை தடுப்பதற்கும் மேலும் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கும் அந்நாடுகளுக்கு பல்வேறு நிறுவனங்களும், அமைப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
மைக்ரோசாப்ட்டின் துணை நிறுவனர் ஆலன் 9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்துள்ள நிலையில், பேஸ்புக்கின் மார்க் சக்கர்பெர்க், எபோலா தடுப்பு மையத்திற்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதி உதவியாக அளிக்க முன்வந்துள்ளார்.