கோலாலம்பூர், அக்டோபர் 17 – ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ஐ, இம்மாத இறுதிக்குள் 36 நாடுகளில் வெளியிட ஆப்பிள் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில், உலக அளவில் உள்ள ஆப்பிள் வாடிக்கையாளர்களிடையே ஐபோன் 6 பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி, குறிப்பிட்ட சில மேற்கத்திய நாடுகளில் மட்டும் வெளியான ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.
தொழில்நுட்பம், வெளிப்புறத்தோற்றம், செயலிகளின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் பயனர்களை வெகுவாக கவர்ந்ததால், இதுவரை ஆப்பிள் வரலாற்றில் இல்லாத அளவிற்கு, ஐபோன் 6 விற்பனையில் சாதனை படைத்து வருகின்றது.
எனினும், ஐபோன் 6 வெளியாகாத நாடுகளில், கிரே மார்க்கட் எனும் கள்ளச் சந்தை நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. பயனர்கள் உண்மையான ஐபோன் விலையை விட இரு மடங்கு அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர். இதனை உணர்ந்த ஆப்பிள், இம்மாத இறுதிக்குள் இந்தியா உட்பட உலகின் 36 நாடுகளுக்கு ஐபோன் 6-ஐ வெளியிட தீர்மானித்துள்ளது.
சீனா, இந்தியா மற்றும் மொனாகோவில் 17-ம் தேதி (இன்று) ஐபோன் 6 வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று, இம்மாதம் 23-ம் தேதி இஸ்ரேலிலும், 24-ம் தேதி செக் குடியரசு, மேற்கு இந்தியத் தீவுகள் உள்ளிட்ட சில நாடுகளிலும், இம்மாத இறுதிக்குள் ஒட்டுமொத்தமாக 36 நாடுகளில் ஐபோன் 6 வெளியிடப்படும் என ஆப்பிள் அறிவித்துள்ளது.
மேலும், 2015-ம் ஆண்டிற்குள் 115 நாடுகளில் அதனை வெளியிட ஆப்பிள் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.