தாப்பா, அக்டோபர் 24 – கார் விபத்தில் சிக்கி, ஒரு கையும், காலும் உடைந்த நிலையில், ஆடவர் ஒருவர் விபத்து நடந்த பகுதியில் இருந்து அருகில் உள்ள தோட்டப்பகுதி வரை, 3 நாட்கள் தவழ்ந்தே சென்றுள்ளார். இதன் பின்னர் மயங்கிக் கிடந்த அவரை பூர்வகுடியைச் சேர்ந்த ஒரு நபர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
ஈப்போ – கோலாலம்பூர் பாதையில் தானா மாஸ் அருகே, நிகோலஸ் ஆன்ட்ரூ (33 வயது), தியாகராஜன் (34 வயது) ஆகிய இருவரும் சென்ற கார் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.
இதையடுத்து காரில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார் ஆன்ட்ரூ. இதில் அவரது ஒரு கையிலும் ஒரு காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. எனினும் மனம் தளராத ஆன்ட்ரூ அப்பகுதியில் உள்ள நதிக்கரை ஓரம் மெதுவாக தவழ்ந்து சென்றுள்ளார். இவ்வாறு 3 நாட்கள் தவழ்ந்து சென்ற அவர், ஒரு செம்பனை தோட்டப் பகுதிக்குள் நுழைந்ததும் மயக்கமுற்றார்.
கடந்த புதன்கிழமை மயங்கிய நிலையில் ஆன்ட்ரூவைக் கண்ட பூர்வகுடி நபர் ஒருவர் உடனடியாக தாப்பா மருத்துவமனையில் அவரைச் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சைக்குப் பின் கண் விழித்த ஆன்ட்ரூ, விபத்தின்போது தன்னுடன் இன்னொரு நபரும் உடன் இருந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து தீயணைப்புத் துறையினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்தபோது அங்கு காருக்குள் இறந்த நிலையில் காணப்பட்டார் தியாகராஜன்.
சம்பவத்தன்று இருவரும் தாப்பாவில் இருந்து பீடோர் நோக்கிச் சென்றபோது, சாலையோர வளைவில் சறுக்கிய அவர்கள் பயணம் செய்த கார், பின்னர் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளது. இச்சம்பவம் அதிகாலை அதிகாலை 3 மணிக்கு நிகழ்ந்தது விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.