புது டில்லி, அக்டோபர் 29 – சியாவுமி ( Xiaomi) திறன்பேசிகளைப் பயன்படுத்துவது தேசப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான ஒன்று என இந்திய விமானப் படை சமீபத்தில் தெரிவித்து இருந்தது.
சியாவுமி திறன்பேசிகள் தற்போது இணைய வர்த்தகத்தின் மூலமாகவே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதற்காக அந்நிறுவனம் சேகரிக்கும் பயனர்களின் தகவல்கள் அனைத்தும் சீனாவின் தகவல் தொழில்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பினால் பாதுகக்கப்படுகின்றது.
இதன் மூலம் சீனா, பயனர்களின் தகவல்களை அறிந்து கொள்ள வாய்ப்புள்ளதாக இந்திய விமானப்படை எச்சரித்து இருந்தது.
சியாவுமி நிறுவனம், இந்திய விமானப்படையின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து இருந்தபோதிலும், இதன் காரணமாக இந்திய வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கருத்துகின்றது.
இந்தியாவில் சிறப்பாக காலூன்ற நினைக்கும் இந்த தருணத்தில், தேவையற்ற சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக இந்தியாவில் தனித்த தகவல் மையம் அமைக்கும் முடிவில் அந்நிறுவனம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்சமயம் சீனாவை சார்ந்து இருக்காத தகவல் மையமான அமேசானுக்கு அந்நிறுவனம் மாறி உள்ள நிலையில், புதிய தகவல் மையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று அந்நிறுவன வட்டாரங்களால் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.