Home நாடு “மலாய்க்காரர் அல்லாத வாக்குகளை பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி இழக்கும்” – டத்தோ ஹென்ரி எச்சரிக்கை

“மலாய்க்காரர் அல்லாத வாக்குகளை பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி இழக்கும்” – டத்தோ ஹென்ரி எச்சரிக்கை

627
0
SHARE
Ad

Henry-Dato-300-x-200ஜோர்ஜ் டவுன், நவம்பர் 3 – தேசிய முன்னணி அரசாங்கம் பல்வேறு காரணங்களால், அடுத்த பொதுத் தேர்தலில் மலாய்க்காரர் அல்லாதவர்களின் வாக்குகளை மேலும் இழக்கும் நிலைமை ஏற்படலாம் என பினாங்கு மாநில மஇகா தொடர்புக் குழுவின் பொருளாளரும், மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ ஹென்ரி பெனடிக் ஆசீர்வாதம் (படம்) எச்சரித்துள்ளார்.

நேற்று பினாங்கில் நடைபெற்ற மஇகா தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோது டத்தோ ஹென்ரி, தொடர்ந்து தேச நிந்தனைச் சட்டங்கள் பாய்வது, ஒரே மலேசியா கொள்கை நடைமுறையில் பாரபட்சமாக அமுல்படுத்தப்படுவது ஆகிய காரணங்களால், தேசிய முன்னணி வாக்குகளை இழக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மஇகா பாகான் தொகுதித் தலைவருமான அவரது உரையின் சாராம்சங்களை நேற்றைய ‘மலேசியன் இன்சைடர்’ இணைய செய்தித் தளம் விரிவாக வெளியிட்டிருக்கின்றது.

#TamilSchoolmychoice

கேலிக் கூத்தாகிவிட்ட ஒரே மலேசியா திட்டம்…

“ஒரே மலேசியா திட்டம் என்பது வெறும் வாய்ப் பேச்சாகவும், கேலிக் கூத்தாகவும் இருக்கின்றது. அதன் உண்மையான மதிப்பு வெளிப்படுத்தப்படும் வண்ணம் அமுலாக்கங்கள் இல்லை. குறிப்பாக சாதாரண பொதுமக்களும், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும் பாயும் தேச நிந்தனைச் சட்டம், பைபிளை எரிப்போம் என்று பேசும் பெர்காசாவின் இப்ராகிம் அலி மீது பாய்வதில்லை. இந்த நிலைமை சீர்செய்யப்படாமல் இதே போன்று தொடர்ந்தால் ஒரே மலேசியா கொள்கை மக்கள் பார்த்து சிரிக்கும் கொள்கையாகி விடும்” என்றும் ஹென்ரி தனது உரையில் கூறினார்.

சாதாரண மக்களின் மீதும், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது மட்டும் தேச நிந்தனைச் சட்டம் பயன்படுத்தப்படுவது மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது என்று கூறிய ஹென்றி, இதன் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு இரண்டு பேர் வெளிநாடுகளின் அரசியல் அடைக்கலம் கோரும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் சாடினார்.

தேச நிந்தனை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அல்வின் தான் அமெரிக்காவிலும், மாணவர் போராட்டவாதி அலி அப்துல் ஜலில் சுவீடன் நாட்டிலும் அரசியல் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“நமது நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து மிக அபூர்வமாகவே நமது குடிமக்கள் வெளிநாடுகளில் அரசியல் அடைக்கலத்திற்கு விண்ணப்பித்திருக்கின்றனர். எத்தனை போராட்டங்கள், பிரச்சனைகள் என்றாலும், நமது அமைதியான அழகான நாட்டை விட்டு ஓட யாரும் விரும்புவதில்லை. ஆனால் இப்போது அடுத்தடுத்து இருவர் அதிலும் இளைஞர்கள் அந்த முடிவை எடுத்துள்ளனர்” என்றும் ஹென்ரி சுட்டிக் காட்டினார்.

இப்ராகிம் அலி எது வேண்டுமானாலும் பேசலாம் – ஆனால் நடவடிக்கையில்லை

“ஆனால், பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி எதை வேண்டுமானாலும் பேசலாம். மற்ற மதங்களை எப்படி வேண்டுமானாலும் தரக் குறைவாக பேசலாம். மற்ற இனங்களை எப்படி வேண்டுமானாலும் பேசி புண்படுத்தலாம். உதாரணமாக அவர் கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளை எரிப்போம் என்கிறார். அதில் ஒன்றும் குற்றமில்லை என்கிறார் அரசாங்க தலைமை வழக்கறிஞர். இதுதான் ஒரே மலேசியா கொள்கையின் அமுலாக்கமா?” என ஹென்றி தனது உரையில் கேள்வி எழுப்பினார்.

“தேசிய முன்னணி அரசாங்கம் பிரச்சாரம் செய்யும் ஒரே மலேசியா கொள்கை என்பது மக்கள் “பிரிம்1” தொகை வழங்குவது மட்டும் அல்ல. நமது சட்டங்களை இனம், மதம் பார்க்காமல் எல்லோருக்கும் சமமாக அமுல்படுத்துவதும் ஆகும். தேசிய முன்னணி அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளுக்கு நம் மீது தாக்குதல் தொடுக்க நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளன. ஏற்கனவே பெருகி வரும் தேசிய முன்னணிக்கு எதிரான முழக்கங்கள் மேலும் கூடுவதற்கு இது வழிவகுத்துள்ளது. இது கவலைக்குரிய போக்கு” என்றும் ஹென்ரி எச்சரித்துள்ளார்.

பினாங்கு மஇகாவின் தீபாவளி விருந்தில் இளைஞர் விளையாட்டுத் துறை துணை அமைச்சரும், ம.இ.கா தேசிய உதவித் தலைவருமான டத்தோ எம்.சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.