புது டில்லி, நவம்பர் 4 – உலகின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான அமேசான், இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் நிறுவனங்களுக்கான சட்டங்கள் நிலைத்தன்மை அற்றவையாக இருப்பதால், இந்திய அளவிலான வர்த்தகத்தை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இதே போன்ற நிலை சீனாவிலும் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“இந்தியா மற்றும் சீனாவில் எங்களது வர்த்தகம் நிலை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இங்குள்ள நிலைத் தன்மை அற்ற நிர்வாக சட்ட திட்டங்கள் ஆகும். இதன் காரணமாக எங்களது நிறுவனத்தால் போதுமான நிதியை கையாள முடியவில்லை.”
“மேலும் நாங்கள், அனைத்துலக நடவடிக்கைகளை இங்கு கடைபிடித்தால் இங்குள்ள சட்ட திட்டங்கள் மீறப் படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது மேற்கூறிய நாடுகளை எங்கள் நிறுவனத்தின் மீது அபராதமோ அல்லது உரிமம் ரத்தோ செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்”
“இந்திய அரசு, தங்கள் நாட்டில் செயல்படும் நிறுவனங்களை வெளிநாட்டு அமைப்புகள் நிர்வகிப்பதை கட்டுப்படுத்துகிறது. இது போன்ற காரணங்களால் எங்களால் இந்தியா மற்றும் சீனாவில் எங்களது வர்த்தகத்தை தொடரமுடியாமல் போகலாம்” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை தொடங்கிய அமேசான் நிறுவனம், உலக அளவில் இந்திய சந்தைகள் அதிவேகமாக வளர்ச்சி பெற்று வருகின்றன என்று அறிவித்து இருந்தது. மேலும், ஒரு ஆண்டிற்குள்ளாக இந்தியாவில் அந்நிறுவனத்தின் விற்பனை 1 பில்லியன் டாலர்களைத் தொட்டுவிட்டதாகவும் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.