லண்டன், நவம்பர் 5 – சவுதி அரேபியா அமெரிக்காவுக்கு மட்டும் எண்ணெய்யின் விலையை குறைத்ததால் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து பேரல் ஒன்று மலேசிய ரிங்கிட் 300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய நாடாக உள்ள சவுதி அரேபியா அமெரிக்காவுக்கு மட்டும் எண்ணெய் விலையை குறைத்துள்ளது தான்.
சவுதி அரசுக்கு சொந்தமான சவுதி ஆரம்கோ என்ற உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் அமெரிக்காவுக்கு அளிக்கும் கச்சா எண்ணெய்யின் விலை செவ்வாய்க்கிழமை குறைத்தது.
அமெரிக்கா தங்கள் நாட்டிலேயே பல எண்ணெய் கிணறுகளை தோண்டத் துவங்கியுள்ளது. இதனால் அமெரிக்காவில் அதிக அளவில் எண்ணெய் எடுக்கப்படுகிறது.
இந்த போட்டியை சமாளிக்கவும், அமெரிக்காவில் தோண்டி எடுக்கப்படும் எண்ணெய்யை விட தங்கள் நாட்டு எண்ணெயை குறைந்த விலையில் அமெரிக்காவுக்கே விற்கவும் சவுதி இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
மேலும் ரஷ்யா, வெனிசுவேலா உள்ளிட்ட நாடுகளிடம் இழந்த மதிப்பை மீண்டும் பிடிக்கவும் சவுதி இந்த விலை குறைப்பை செய்துள்ளது. சவுதியின் நடவடிக்கையால் எண்ணெய் சந்தையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எண்ணெய் சந்தையில் தாங்கள் மீண்டும் அனைத்துலக அளவில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற திட்டத்தில் சவுதி செய்துள்ள விலை குறைப்பால் மற்ற எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் கவலை அடைந்துள்ளன.