கோலாலம்பூர், நவம்பர் 6 – சிங்கப்பூரில் தங்கி பணியாற்றி வரும் மலேசியர்களை ஒன்றிணைக்க புதிய சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் மலேசியர் சங்கம் (The Malaysian Association of Singapore – Masis) என்ற அழைக்கப்படும் இந்த சங்கம் சிங்கப்பூரில் வாழும் மலேசியர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு பல உதவிகளை செய்யும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 31 -ம் தேதி, இச்சங்கத்தின் தலைவர் ஆப்ரஹாம் வெர்ஜிஸ், உதவித்தலைவர்கள் டத்தோ எலைன் தே மற்றும் ஜெனிபர் லிம் ஆகியோர் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
வழக்கறிஞரான வெர்ஜிஸ் இச்சங்கம் குறித்து கூறுகையில், “சிங்கப்பூரில் நிறைய மலேசியர்கள் வசிக்கிறார்கள். எனினும் இது போன்ற சங்கம் எதுவும் இல்லாத காரணத்தால் அவர்களை ஒருங்கிணைக்க இயலவில்லை. இனி அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க இந்த சங்கம் உதவி செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சங்கம் அறிமுக விழாவில் சிங்கப்பூருக்கான மலேசிய தூதரக ஆணையர் டத்தோ ஹுஸ்னி சை யாக்கோப், டேலண்ட் கார்பரேசன் மலேசியா நிறுவனத்தின் தலைவர் ஜோஹான் மாஹ்முட் மெரிகன் ஆகியோர் உட்பட 120 முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சங்கம் முற்றிலும் லாப நோக்கமற்றது என்றும், மலேசிய மாணவர்கள் உட்பட மலேசிய நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் பொதுவானது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சங்கத்தில் சாதாரண, இணையான, குடும்பம், மாணவர்கள், வெளிநாடு வாழ் மலேசியர்கள், பெருநிறுவனம் மற்றும் கெளரவ உறுப்பினர் என பல்வேறு உறுப்பினர் பிரிவுகள் உள்ளன.
இந்த சங்கம் குறித்த மேல் விபரங்களுக்கு www.masis.org.sg என்ற அகப்பக்கத்தை தொடர்பு கொள்ளவும்.