கோலாலம்பூர், நவம்பர் 5 – கடந்த மாதம் ஜோகூர் மாநிலத்தில் காவல்துறையால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இந்திய நாட்டைச் சேர்ந்தவர் காலிஸ்தான் புலிகள் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,“புக்கிட் அமான் தீவிரவாத ஒழிப்புத்துறை அக்டோபர் 24-ம் தேதி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், 36 வயதான நபர் ஒருவரை ஜோகூரில் பதுங்கி இருந்தபோது கைது செய்தனர். அவர் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர். இந்த இயக்கம் தான் பஞ்சாப் முன்னாள் அமைச்சர் படுகொலை மற்றும் 2009-ம் ஆண்டு ராஸ்திரிய சிக் சங்காட் தலைவர் ருல்டா சிங்கின் கொலையிலும் சம்பந்தப்பட்டவர்கள் என நம்புகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பல இடங்கில் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கும் இந்த இயக்கம் தான் காரணம் என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட அந்த நபர் கடந்த 2010-ம் ஆண்டு மலேசியாவிற்குள் நுழைவதற்கு முன் நேபாளம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் பதுங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில், முறைய ஆவணங்கள் இல்லாமல் நாட்டிற்குள் நுழைந்ததற்காக குடிநுழைவு சட்டம் 1959/63 பிரிவு 6 (1)-ன் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பது விசாரணை கண்டறியப்பட்டதால், நேற்று இந்தியாவிற்கு திரும்ப அனுப்பப்பட்டார் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
கடந்த 2009 -ம் ஆண்டில் இருந்து இதுவரை மலேசியாவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் இவர் ஆறாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.