Home தொழில் நுட்பம் “வரைப்பட்டிகை” – டேப்லட்டுக்கு கலைஞர் அறிமுகப்படுத்தும் தமிழ்ச் சொல்!

“வரைப்பட்டிகை” – டேப்லட்டுக்கு கலைஞர் அறிமுகப்படுத்தும் தமிழ்ச் சொல்!

1055
0
SHARE
Ad

சென்னை, நவம்பர் 9 – விறுவிறுவென மாறிவரும் தொழில்நுட்ப உலகில் நாளுக்கொரு கருவியும், நாளுக்கொரு தொழில் நுட்பமும், மென்பொருள் உருவாக்கங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

தமிழ் ஆர்வலர்களுக்கும், படைப்பாளர்களுக்கும் உள்ள இன்றைய பெரும் பிரச்சனை என்னவென்றால், இந்த புதிய தொழில் நுட்ப வடிவங்களை அப்படியே ஆங்கிலப் பெயர்களை வைத்து அழைப்பதா அல்லது தமிழில் புதிய பெயர் சூட்டி அழகு பார்ப்பதா என்பதுதான்.

இந்நிலையில் தனது 92வது வயதிலும் கணினியிலும், இணையத் தளங்களிலும், முகநூல் பக்கங்களிலும், டுவிட்டரிலும் தீவிரமாக உலா வந்து கொண்டிருப்பவர் கலைஞர் மு.கருணாநிதி.

#TamilSchoolmychoice

அண்மையக் காலமாக தட்டைக் கணினி என்று பரவலாக குறிப்பிடப்பட்டு வரும் “டேப்லெட்”(TABLET) என்ற கையடக்க கருவிக்கு திமுக தலைவர் கருணாநிதி புதிய சொல்லை அறிமுகம் செய்துள்ளார்.

Kalainyar with Tablet

டேப்லெட் என்ற வார்த்தைக்கு ஈடாக ‘வரைப்பட்டிகை’ என்ற சொல்லை அவர் பயன்படுத்தி உள்ளார். தனது முகநூல் பதிவு ஒன்றில் வெறும் வேட்டியும், உள்சட்டையும் அணிந்த தோற்றத்தில் காணப்படும் கலைஞர், தனது தட்டைக் கணினியில் எதையோ பார்த்துக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

மேலும், “வரைப்பட்டிகை ‘டேப்லட்’ வாயிலாக சமூக வலைத்தளங்களில் எனக்கு வரும் கருத்துக்களை காணும்போது,” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.

தட்டைக் கணினிகளா? அல்லது வரைப்பட்டிகைகளா?

மலேசியாவில் இயங்கும் நமது ‘செல்லியல்’ தகவல் ஊடகம் தொடங்கிய காலம் முதல் இயன்ற வரையில் புதிய தொழில்நுட்ப வடிவங்களுக்கு தமிழ் மொழியிலேயே பெயர் சூட்டி எழுதி வருகின்றோம். அந்த வகையில் டேப்லட்டுகளுக்கு ‘தட்டைகள்’ அல்லது தட்டைக் கணினிகள் என்றே எழுதி வருகின்றோம்.

இது குறித்து செல்லியல் தொழில்நுட்ப வடிவமைப்பாளர் முத்து நெடுமாறனின் கருத்து கேட்ட போது “பொதுவாக, டேப்லட் மற்றும் கைத்தொலைபேசிகளை ஒட்டு மொத்தமாக கையடக்கக் கருவிகள் எனக் கூறுகின்றோம். கைத்தொலைபேசிகளுக்கு பொருத்தமான சொல், செல்பேசி என்பது எனது கருத்து. அதே வேளையில் தற்போது ஸ்மார்ட் போன் என அழைக்கப்படும் செல்பேசிகளை திறன்பேசிகள் என அழைக்கின்றோம். டேப்லட்டுகளுக்கு பொருத்தமான சொல் தட்டைகள் என்பது எனது கருத்து” என்று கூறியுள்ளார்.

இன்றைக்கு உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள இணையம் என்ற வார்த்தை முதன் முதலில் மலேசியாவில்தான் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றைக்கு இன்டர்நெட் என்ற வார்த்தையின் தமிழ்ப் பிரயோகமாக நிலைபெற்றுவிட்டது என்பது இங்கே பெருமையுடம் சுட்டிக் காட்டப்பட வேண்டியது அவசியமாகும்.

எனவே, டேப்லட் என்ற கருவிக்கு கலைஞர் மு.கருணாநிதி அறிமுகம் செய்துள்ள ‘வரைப்பட்டிகை’ என்ற சொல் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிரபலமாகுமா? அல்லது ‘தட்டை’ என்ற வார்த்தை பரவலாகப் பயன்பாட்டிற்கு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதற்கிடையில் தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள் இது குறித்து கருத்து தெரிவித்தால் செல்லியலில் பதிவேற்றம் செய்யப்படும்.