புதுடெல்லி, நவம்பர் 8 – ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் வெளிப்பட்டபோதே அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பிரதமர் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் (படம்) அதிரடிக் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஸ்பெக்ட்ரம் விவகாரம் காரணமாகவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது என்றும் கூறினார்.
“கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வித்தியாசமான முறையில் கையாளப்பட்டு விட்டது. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியானதுமே அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகி மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்,” என்றார் சிதம்பரம்.
2ஜி அலைக்கற்றை உரிமங்களுக்கான ஒதுக்கீட்டில், முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற வழியை தாம் வலியுறுத்தவில்லை என்று குறிப்பிட்ட அவர், உரிமங்கள் வழங்கிய பின்னர் அதில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்ததும் அரசே அவற்றை ரத்து செய்திருக்க வேண்டும் என்றார்.
“இதற்காக நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருந்தது தவறு. உரிமங்களை அரசே ரத்து செய்திருந்தால், காங்கிரஸ் மீதான ஊழல் கறை ஓரளவு கட்டுப்படுத்தப் பட்டிருக்கும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் காங்கிரசை மிகப்பெரிய அளவில் காயப்படுத்திவிட்டது,” என்று சிதம்பரம் மேலும் கூறினார்.
ஏற்கெனவே சோனியா, ராகுல் குறித்தும் சில கருத்துக்களை அவர் கூறியது காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் விமர்சனங்களை எழுப்பியது. இந்நிலையில், மன்மோகன் சிங் குறித்தும் சிதம்பரம் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சோனியாவும் ராகுல் காந்தியும் மக்களிடம் நிறைய பேச வேண்டும் என்றும் காங்கிரசுக்கு நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் தலைவராக வரலாம் என்றும் சிதம்பரம் கருத்து தெரிவித்து இருந்தார்.
இதுவும் காங்கிரஸ் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை இலக்கு வைத்து சிதம்பரம் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.