Home நாடு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வெடிகுண்டு பீதி!

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வெடிகுண்டு பீதி!

488
0
SHARE
Ad

KLIA_MTB&Towerகோலாலம்பூர், நவம்பர் 11 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கே.எல்.ஐ.ஏ,) வெடிகுண்டு இருப்பதாக, புகைப்படத்துடன் வெளியான முகநூல் (ஃபேஸ்புக்) பதிவால் பெரும் பரபரப்பு நிலவியது. இணையம் வழி இத்தகவல் வேகமாகப் பரவியதால் பலரும் இதுகுறித்து தங்களின் கருத்துக்களை முகநூல் பக்கங்களில் பகிர்ந்தபடி இருந்தனர்.

ஒன்லி இன் மலேசியா (Only In Malaysia) என்ற பெயரில் இயங்கும் ஃபேஸ்புக் தளத்திலேயே இத்தகைய பதிவு போடப்பட்டிருந்தது. இப்பக்கத்தில் சுமார் 3.7 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஆனால் புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தை தொடர்பு கொண்டபோது அனைத்துலக விமான நிலையத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் ஏதும் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

“விமான நிலையத்தில் இருந்து இது தொடர்பாக எந்தத் தகவலும் இல்லை என்பதால் ஃபேஸ்புக் பதிவு தவறாக இருக்கும் எனக் கருதுகிறோம். சமூக வலைதளப் பயன்பாட்டாளர்கள் இத்தகைய தகவல்களை வெளியிடும் முன்னர், அவை சரிதானா என்பதை காவல்துறையிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்க முடியும்.  குறிப்பிட்ட இத்தகவல் பொய்யானது. ஒருவேளை அந்த ஃபேஸ்புக் பக்கத்தைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நினைத்து, புகைப்படத்துடன் இத்தகவலை வெளியிட்டிருக்கலாம்,” என்று இன்ஸ்பெக்டர் முகமட் மஸ்டாம் முகமட் நவாவி தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பான அந்த ஃபேஸ்புக் பதிவை சுமார் 200 பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். எனினும் தகவல் உண்மையில்லை என்பது பரவியதும் அந்தப் பதிவு அகற்றப்பட்டுள்ளது.