அபுஜா, நவம்பர் 11 – நைஜிரியாவின் பொட்டிஸ்க்கும் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 48 மாணவர்கள் பலியாகி உள்ளனர்.
போக்கோ ஹரம் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் நைஜிரியாவில் தொடர் தாக்குதல்களும், தீவிரவாத செயல்களும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. நேற்றும் நைஜிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள யோபே மாநில தலைநகரான பொட்டிஸ்க்கும் நகரில், கல்லூரி ஒன்றில் தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதலை நிகழ்த்தி உள்ளனர்.
2000 மாணவர்கள் கூடியிருந்த பிரார்த்தனைக் கூடத்தில், தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். எதிர்பாராமல் நடந்த இந்த தாக்குதலில், சுமார் 48 மாணவர்கள் பலியாகியுள்ளனர். பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது.
வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான தகவல்கள் அறிந்ததும், இராணுவத்தினர் அந்தப் பகுதிகளுக்கு விரைந்து சென்றனர். எனினும், மக்கள் அவர்கள் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர். 5 வருடங்களுக்கும் மேலாக, தீவிரவாதிகள் தொடர் இன்னல்களைக் கொடுத்து வந்தும் அவர்களை இராணுவத்தினரால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
பொட்டிஸ்கும் நகரில் கடந்த வாரமும் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் 30 பேர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.