கோலாலம்பூர், நவம்பர் 15 – கடந்த ஜூலை 17 -ம் தேதி, எம்எச்17 விமானம் நடுவானில் பேரிடருக்கு உள்ளான போது அதற்கு பின்னால் இரண்டு அல்லது மூன்று போர் விமானங்கள் சென்றதாக புதிய ரேடார் படத்தை ரஷ்ய வான் பாதுகாப்பு ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து வான் பாதுகாப்பு ஆலோசனை நிறுவனத்தின் தலைமை நிர்வாகி செர்ஜி மெல்னிசென்கோ அந்நாட்டு தினசரி பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “கிழக்கு உக்ரைன் அருகே எம்எச்17 விமானம் பேரிடருக்கு உள்ளான போது இரண்டு அல்லது மூன்று இராணுவ போர் விமானங்கள் அங்கு பறந்துள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்களுடையதாக இருக்க வாய்ப்பில்லை காரணம் அவர்களிடத்தில் போர் விமானங்கள் கிடையாது என்றும் செர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே அந்த போர் விமானங்கள் ரஷ்யா அல்லது உக்ரைனுடையதாக தான் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ரஷ்யா போர் விமானங்கள் எல்லை மற்றும் கண்காணிப்பை தாண்டி இதை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் செர்ஜி தெரிவித்துள்ளார்.
புதிய ரேடார் தகவலின் படி, போர் விமானங்கள் எம்எச்17 விமானத்தின் இடது பக்கமாகத் தான் பறந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்று செர்ஜி கூறியுள்ளார்.
எம்எச்17 பாகங்கள் கண்டறியப்பட்டபோது அதன் இடது பக்கமாக தான் ஏவுகணை தாக்கியிருப்பதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை 17-ம் தேதி, எம்எச்17 விமானம் 15 விமான ஊழியர்கள் உட்பட 298 பேருடன் ஆம்ஸ்டெர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு வந்து கொண்டிருந்த போது ரஷ்ய எல்லைப் பகுதிக்கு அருகே உள்ள கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இதுவரை யாரும் அக்குற்றத்தை ஒப்புக்கொள்ள முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.