Home இந்தியா சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன?- வைகோ விளக்கம்

சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன?- வைகோ விளக்கம்

500
0
SHARE
Ad

vaikoசென்னை, நவம்பர் 15 – விமான நிலைய விதிமுறைகளை மதிக்காமல் பாதுகாப்பு பகுதிகளை மீறிச் சென்றதாக வைகோ உட்பட மதிமுகவினர் 400 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள வைகோ, “மலேசியாவின் பினாங்கு நகரில் நடைபெற்ற அனைத்துலக தமிழ் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு நவம்பர் 12-ஆம் தேதி, நான் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் விமான நிலைய வளாகத்தில் வரவேற்கக் காத்திருந்தனர். அவர்கள் விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழையவில்லை.

#TamilSchoolmychoice

விமான நிலையத்தை விட்டு நான் வெளியே வந்தவுடன், வாசலில் காத்திருந்த பத்திரிகை நிருபர்களிடம் பேட்டி கொடுத்துவிட்டு நடந்து வந்துபோது, திரண்டிருந்த தொண்டர்கள் மாலைகளும், கைத்தறி ஆடைகளும் அணிவித்தனர். அங்கிருந்து அனைவரும் நடந்தே தொலைவில் உள்ள வெளிவாசலை நோக்கிச் சென்றோம்.

வெளிநாடுகளுக்குச் செல்லும்போதோ, திரும்பி வரும்போதோ வழி அனுப்புவதையோ, வரவேற்பதையோ பொதுவாக நான் விரும்புவதில்லை. பல நேரங்களில் நான் வருகின்ற தேதியைக்கூடச் சொல்லாமல், விமான நிலையத்தில் இறங்கி வீட்டிற்குச் சென்றிருக்கிறேன்.

இம்முறை பினாங்கு மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க பினாங்கு பிரகடனம் வெளியிடப்படுவதற்கு நான் முக்கியக் காரணமாக இருந்தேன் என்பதால், கழகத்தினர் வரவேற்பு ஏற்பாட்டைச் செய்த செய்தி, நான் புறப்படும் நேரத்தில்தான் தெரிய வந்தது.

நான் பிறந்த நாள் விழா கொண்டாடுவதில்லை. கழகத் தோழர்கள் ஆர்வத்தோடு இந்த வரவேற்பை செய்திருந்தனர். வெளிவாசலை ஒட்டி குதிரைகள் பூட்டப்பட்டிருந்த வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. அதைத் தவிர்க்க வேண்டும் என்று நான் தோழர்களிடம் கூறினேன்.

குதிரை வண்டியின் முன்னால் காவல்துறையினர் நின்று தடுத்தபோது கழகத் தோழர்களுக்கும், காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஏதாவது அமளி ஏற்பட்டுவிடக்கூடாது, குதிரைகள் மிரண்டு காவல்துறையினருக்கு காயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற கவலையோடு குதிரை வண்டியில் ஏறி நின்று கழகத் தோழர்களைக் கண்டித்து அறிவுரையாகப் பேசினேன். குதிரை வண்டி ஒரு அடிகூட நகரவில்லை.

அதன்பின்னர் நான் குதிரை வண்டியைவிட்டு இறங்கி, தொண்டர்களோடு நடந்துசென்றபோது, தொண்டர்களைக் காவல்துறையினர் தடுத்ததில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த நேரத்தில்கூட தொண்டர்களைத்தான் நான் கடுமையாகக் கண்டித்தேன். தொண்டர்களைக் கை வைத்துத் தள்ள முயன்ற ஒரு போலிஸ் அதிகாரியிடம், ஏன் பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறீர்கள்? நான் இன்னும் சற்று தூரத்திலேயே காரில் ஏறிச்செல்ல இருக்கிறேன்.

நீங்கள் தொண்டர்கள் மீது கை வைத்தால் விபரீதம் ஏற்படும் அல்லவா? பிரச்சனைக்கு நீங்கள்தானே காரணம் என்று அந்தக் காவல்துறை அதிகாரியிடம் நான் பேசிக்கொண்டிருந்தபோது, எடுக்கப்பட்ட புகைப்படம் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

குதிரை வண்டியில் செல்லவேண்டும் என்று நான் வாக்குவாதம் செய்தது போன்ற தோற்றத்தை இப்புகைப்படம் ஏற்படுத்துகிறது. நான் குதிரை வண்டியில் ஏறிச் சிறிது தூரம் சென்றதாக தவறான தகவல் ஓரிரு ஏடுகளில் வெளிவந்துள்ளது.

சில தலைவர்கள் தமிழ்நாட்டுக்குள்ளேயே பிரயாணம் செய்கிறபோது, பலமணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் அவதிக்கு ஆளாவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

நான் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டபோதும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், பொதுமக்களுக்கு சிறிதளவு தொல்லையும் ஏற்படாமல் நானும், எங்கள் இயக்கத் தொண்டர்களும் செயல்பட்டோம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

எங்கள் இயக்கத்தினர் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. நடந்தது என்ன? என்பதை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்காகவே இந்த விளக்கத்தைத் தந்துள்ளேன் என வைகோ கூறினார்.