கோலாலம்பூர், நவம்பர் 15 – அரசாங்கமும் தேர்தல் ஆணையமும் இணைந்து நாட்டில் உள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களையும் தாமாக முன்வந்து பதிவு செய்ய வேண்டும் என பிரதமர் துறை முன்னாள் துணையமைச்சர் டத்தோ முருகையா வலியுறுத்தியுள்ளார்.
இதன்வழி நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற அரசாங்கம் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
“இன்றைய நவீன உலகில் ஒவ்வொருவரும் ஏராளமான பணிகளில் மூழ்கி உள்ளனர். இந்த அவசர யுகத்தில் பணிச்சுமையின் காரணமாக பலரால் வாக்காளர்களாக தங்களை பதிவு செய்துகொள்ள முடியவில்லை. இதனால் வாக்களிக்கும் தகுதியையும் பெற முடியவில்லை. இத்தகைய சூழ்நிலையில் அரசாங்கம் வாக்காளர்கள் தாமாக முன்வந்து பெயர்களை பதிவு செய்ய வேண்டும் எனக் காத்திருக்காமல் 21 வயது பூர்த்தியான அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும். இதற்கு அனைவரது பெயர்களையும் அரசாங்கமே வாக்காளர்களாகப் பதிவு செய்யலாம்,” என்றும் முருகையா மேலும் கூறியுள்ளார்.
உண்மையான வாக்காளர்களின் எண்ணிக்கை உயரலாம்
அனைவரையும் வாக்காளர்களாக பதிவு செய்வதால் குறிப்பிட்ட சில தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை திடீரென மிக அதிக அளவில் உயர வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையம் கூறி இருப்பது சரிதான் என்று குறிப்பிட்டுள்ள அவர், உண்மையான வாக்காளர்களால் இத்தகைய நிலை ஏற்படுமாயின் அதில் தவறு காண ஒன்றும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
“வாக்காளர்களை தேர்தல் ஆணையம் தாமாக முன்வந்து பதிவு செய்ய வேண்டுமானால் தேசிய பதிவு இலாகாவிடம் இருந்து மிக விரிவான தகவல்கள் கிடைக்க வேண்டும். மேலும் வாக்காளர்களின் முகவரி உள்ளிட்ட தகவல்களில் தவறு இருப்பின் குழப்பங்கள் ஏற்படும். இதை தேர்தல் ஆணையம் விரும்பவில்லை என தேர்தல் ஆணையத் தலைவர் கூறியுள்ளதை ஏற்க இயலாது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் பிறப்புப் பத்திரம் வழங்கப்படுகிற நிலையில் அவர்களை வாக்காளர்களாக பதிவு செய்வதில் என்ன தவறு உள்ளது? ” என்றும் முருகையா தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஒருவேளை தகவல்களில் குழப்பங்களோ தவறுகளோ இருப்பதாக தேர்தல் ஆணையம் கருதுமாயின் அதை தெளிவுபடுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை ஆகும். எனவே 21 வயது பூர்த்தியான அனைவரையும் வாக்காளர்களாக பதிவு செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும்,” எனவும் முருகையா மேலும் கூறியுள்ளார்.
முன்பு தாம் தேசிய முன்னணி உறுப்புக் கட்சியான பிபிபி இளையர் பிரிவுத் தலைவராக இருந்தபோது தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டி உள்ள அவர், அதன் மீது இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.