Home வணிகம்/தொழில் நுட்பம் மலேசியாவில் செல்பேசிகளின் சேவை, வர்த்தகப் பிரிவின் வருவாய் 7.5 பில்லியன் டாலர்கள்!

மலேசியாவில் செல்பேசிகளின் சேவை, வர்த்தகப் பிரிவின் வருவாய் 7.5 பில்லியன் டாலர்கள்!

629
0
SHARE
Ad

mobile-phonesகோலாலம்பூர், நவம்பர் 15 – மலேசியாவில் 2014-ம் ஆண்டு முடிவில்,செல்பேசிகளைப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை 42.9 மில்லியனைத் தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.  அதன் காரணமாக, இந்த ஆண்டில் செல்பேசிகளின் சேவை மற்றும் வர்த்தகப் பிரிவின் வருவாய் 7.45 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொடும் என ஃப்ராஸ்ட் மற்றும் சல்லிவன் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மலேசியாவில் செல்பேசிகளின் சேவை மற்றும் வர்த்தகப் பிரிவின் வருவாய் உயர்வுக்கு தரவு மற்றும் மதிப்புக் கூட்டிய சேவைகள் வழிவகுக்கின்றன. இதன் காரணமாக மலேசியாவில் செல்பேசிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்சமயம், செல்பேசிகள் பயனர்கள் மத்தியில் 140.7 என்ற விகிதத்தில் அதிகரித்து வருகின்றது.”

“குரல் அழைப்புகள் இல்லாத சேவைப்பிரிவுகள் 2 சதவீத வளர்ச்சியினைப் பெற்றுள்ளன. எனினும், குரல் அழைப்புகள் கொண்ட சேவைப்பிரிவுகள் வளர்ச்சியில் சரிவை சந்தித்து வருகின்றன. இதற்குக் காரணம், திறன்பேசிகளில் குறுந்தகவல்களை அனுப்பும் வசதி கொண்ட செயலிகள் அதிகரிப்பதே ஆகும்”

#TamilSchoolmychoice

திறன்பேசிகளின் ஆதிக்கம் உயர்வு 

“2013-ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2014-ம் ஆண்டில் திறன்பேசிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு முடிவில் மலேசியாவில் 48 சதவீதத்துக்கும் அதிகமானோர் திறன்பேசிகளைப் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. தொழில்நுட்ப நிறுவனங்களும் பயனர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சேவை ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஃப்ராஸ்ட் மற்றும் சல்லிவன் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், கணினி சார்ந்த இணையப் பயன்பாட்டை விட, திறன்பேசிகள் சார்ந்த இணையப் பயன்பாடு நாளுக்கு நாள் உச்சத்தை நெருங்குகிறது.

திறன்பேசிகளிலும் 3ஜி தொழில்நுட்பத்தை தாண்டி 4ஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், மலேசியாவில் தற்சமயம் 3 சதவீத பயனர்களே 4ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.

மேலும், மலேசியாவில் 68 சதவீதம் பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர். இவர்களில் 95 சதவீதம் பேர் நட்பு ஊடகங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டரைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக மலேசியாவின் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகின்றது. வெகுவிரைவில் வெளிநாட்டு நிறுவனங்களின் பெரும் முதலீடுகளை மலேசியத் தொழில்நுட்பத் துறையில் எதிர்பார்க்கலாம்.