கோலாலம்பூர், நவம்பர் 17 – வடகிழக்கு பருவக் காற்று வீசத் தொடங்கியிருப்பதைத் தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் 19ஆம் தேதி புதன்கிழமை வரை, கிளந்தான், திரெங்கானு கடற்கரையோரப் பகுதிகளில் பலமான காற்று வீசுவதோடு, கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பும், கொந்தளிப்பும் அதிகமாக இருக்கும் என மலேசியா வானிலை இலாகா அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவக் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை இருக்கும் எனவும், கடல் அலைகள் 3.5 மீட்டர் வரை உயரக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலை சாமுய், கொண்டோர், ரீஃப் நோர்த், லாயாங்-லாயாங் போன்ற பகுதிகளிலும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வானிலையும், கடல் சூழ்நிலையும், சிறிய படகுகளுக்கும், கடற்கரையோர கேளிக்கை நடவடிக்கைகளுக்கும், கடல் விளையாட்டுகளுக்கும் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்பதால் இவற்றிலிருந்து ஒதுங்கி இருக்கும் படி பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் வானிலை இலாகா அறிவித்துள்ளது.
– பெர்னாமா