பெய்ஜிங், நவம்பர் 20 – சியாவுமி நிறுவனம் சீனாவில் செயல்பட்டு வரும் இணையம் மூலமாக பயனர்களுக்கு காணொளிக் காட்சிகளை வழங்கும் இணைய தளமான ‘ஐகியை’ (iQiyi)-ல், சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து இருப்பதாக அறிவித்துள்ளது.
உலக அளவில் இணையம் மூலமாக பயனர்களுக்கு காணொளிகளை வழங்கும் இணைய தளங்களில் முன்னணியில் இருப்பது யூ-டியூப் ஆகும். எனினும், பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக சீனாவில் கூகுள், பேஸ்புக் மற்றும் யூ-டியூப் போன்ற தளங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சீனாவில் பயனர்களுக்கு காணொளிகளை வழங்கும் இணையதளங்களில் ஐகியை முக்கிய இடம்பெற்றுள்ளது.
தற்சமயம் சீனாவில் ஐகியை 450 மில்லியன் பயனர்களைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இதனை மேலும், வளர்ச்சி அடையச் செய்வதற்காக சியாவுமி நிறுவனம் ‘ஷுன்வேய் கேப்பிடல்’ (Shunwei Capital) எனும் நிறுவனத்துடன் இணைந்து 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஐகியை-ன் வளர்ச்சி மேலும் சாத்தியப்படும் என ஐகியை நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பயனர்கள், திறன்பேசிகள் மூலமாகவே ஐகியை இணையதளத்தை அணுகுகின்றனர். இந்நிலையில், ஐகியை நிறுவனத்தின் செயலிகளில் முதலீடுகளை ஏற்படுத்துவதன் மூலமாக, சியாவுமியின் வர்த்தகமும் அதிகரிக்கும் என சியாவுமி நிறுவன வட்டாரங்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.