கோலாலம்பூர், நவம்பர் 20 – ஆப்பிள் நிறுவனம் தனது பீட்ஸ் இசை ஒலிபரப்புச் சேவையை அடுத்த வருடத்திற்குள் அனைத்து ஐபோன்களிலும் மேம்படுத்த இருப்பதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன.
ஆப்பிள் நிறுவனம், தனது ஐட்யூன் மற்றும் ஐரேடியோ சேவையை மேம்படுத்த, ஹெட்போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் பீட்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை கடந்த மே மாதம் 3 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. இந்த பீட்ஸ் நிறுவனம் மின்னணு கருவிகள் தயாரிப்பு மட்டும் அல்லாது இசை ஒலிபரப்பு மற்றும் சேர்ப்பிலும் பெயர் பெற்று விளங்குகிறது.
இந்நிலையில், 2015-ம் ஆண்டின் தொடக்கத்தில், ஆப்பிள் பீட்ஸ் இசை ஒலிபரப்புச் சேவையை அனைத்து ஐபோன் மற்றும் ஐபேட்களிலும் மேம்படுத்த இருப்பதாக தொழில்நுட்ப வட்டாரங்கள் ஆருடங்கள் கூறுகின்றன.
தற்சமயம் ஆப்பிள், ஐஒஎஸ் இயங்குதளங்களில் பீட்ஸ் செயலியினை மேம்படுத்தி உள்ளது. எதிர்வரும் காலங்களில் பீட்ஸ் செயலியை ஐபோன் மற்றும் ஐபேட்களில் நிறுவுவதன் மூலமாக பயனர்கள் மத்தியில் பீட்ஸ்-ன் சேவையை பிரபலப்படுத்த முடியும் என ஆப்பிள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
திறன்பேசிகள் மூலமாக இசை சேர்ப்பு மற்றும் ஒலிபரப்பு சேவை வழங்குவதில் லண்டனைச் சேர்ந்த ‘ஸ்போட்டிஃபை’ (Spotify) நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. ஆண்டிரொய்டு, ஐஒஎஸ், விண்டோஸ் என அனைத்து இயங்குதளங்களுக்கு பொருந்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி, ஆப் ஸ்டோர்களில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகின்றது.
அதன் காரணமாகவே ஆப்பிள் பீட்ஸ் செயலியினை அனைத்து ஆப்பிள் கருவிகளிலும் மேம்படுத்த இருப்பதாக பீட்ஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.