Home தொழில் நுட்பம் ‘வாட்ஸ் அப்’-ல் தகவல் திருட்டை தடுக்கும் குறியாக்க முறை அறிமுகம்!  

‘வாட்ஸ் அப்’-ல் தகவல் திருட்டை தடுக்கும் குறியாக்க முறை அறிமுகம்!  

678
0
SHARE
Ad

whatsappகோலாலம்பூர், நவம்பர் 22 – வாட்ஸ் அப்-ல் பயனர்களின் தகவல்களைப் பாதுகாக்கவும், அளவளாவல்களை (chats) பிறர் அறிந்து கொள்ள முடியாமல் செய்யவும் புதிய வசதி ஒன்று மேம்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு வாட்ஸ் அப்-ல் முழுமையான ‘குறியாக்கம்’ (Encryption) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தகவல் பரிமாற்ற செயலிகளில் முன்னணியில் இருக்கும் வாட்ஸ் அப், ஒவ்வொருநாளும் பயனர்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்த பல்வேறு மேம்பாடுகளை செய்து வருகின்றது. அந்த வகையில், வாட்ஸ் அப் சமீபத்தில் பயனர்களின் தகவல்களை தகவல் திருடர்களிடமிருந்து பாதுகாக்க புதிய குறியாக்க முறையை திறன்பேசிகளில் மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், அந்நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னர், அண்டிரொய்டு திறன்பேசிகளில் முழுமையான குறியாக்க முறையை மேம்படுத்தி உள்ளது. இதன் மூலம் பயனர்களுக்கு மத்தியில் உள்ள அளவளாவல்கள், தகவல் பரிமாற்றங்கள் பாதுகாப்பான முறையில் நடைபெறும்.

#TamilSchoolmychoice

வாட்ஸ் அப்-ன் இத்தகைய பாதுகாப்பு முறை கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் முறைகளை விட சிறந்ததாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த புதிய பாதுகாப்பு முறையை, சட்டத்திற்கு உட்பட்டு, வாட்ஸ் அப் நிறுவனம் கூட ‘டிக்ரிப்ட்’ (Decrypt) செய்ய முடியாது என்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.

தற்சமயம் அண்டிரொய்டு திறன்பேசிகளில் மட்டும் இந்த முறை மேம்படுத்தப்பட்டு இருக்கின்றது. விரைவில் ஐஒஎஸ் கருவிகளிலும் இதனை எதிர்பார்க்கலாம்.