காபுல், நவம்பர் 25 – கிழக்கு ஆப்கானிஸ்தானில், கைப்பந்து விளையாட்டு மைதானம் ஒன்றில் தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய பயங்கரத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 60 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஆப்கான் தலைமை நிர்வாகி டாக்டர் அப்துல்லா அப்துல்லா வெடிகுண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கச் செல்லும் காட்சி
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள பக்திகா மாகாணத்தின் யஹ்யாகையில் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அப்பகுதியின் பிரபல அணிகள் மோதிய கைப்பந்து போட்டி நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் பார்வையாளர்களாய் கூடியிருந்த அந்த மைதானத்தில், விளையாட்டின் விறுவிறுப்பான கட்டத்தின் போது அதி பயங்கர சத்தத்துடன் திடீரென்று குண்டு வெடித்தது.
எதிர்பாராத இந்த தாக்குதலினால் போட்டியை பார்வையிட்டுக் கொண்டிருந்த 50 பேர் உடல் சிதறி பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பக்திகா மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் மோகிஸ் அப்கான் கூறுகையில், “விளையாட்டுப் போட்டியை பார்வையிட வந்த ஒருவர் மனித வெடிகுண்டாகச் செயல்பட்டு இந்த கொடூரத் தாக்குதலை நிகழ்த்தி உள்ளார்” என்று கூறியுள்ளார்.
வெடிகுண்டுத் தாக்குதலில் மரணமடைந்தவர்களின் உறவினர்களுக்கு ஆப்கான் தலைமை நிர்வாகி அப்துல்லா அப்துல்லா ஆறுதல் கூறுகின்றார்.
படங்கள் : EPA