தஞ்சாவூர், நவம்பர் 25 – காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதை தடுக்க தமிழக மக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
தஞ்சை சீனிவாசபுரத்தில் நடந்த விழாவில் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் சங்கமித்தனர். தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பா.ஜ.க. மூத்ததலைவர் இல.கணேசன், மூத்த தலைவர் பழ.நெடுமாறன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் இதில் கலந்து கொண்டார். அவரும், இளங்கோவனும் சிரித்த முகத்துடன் கை குலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் வைகோ பேசுகையில், “கர்நாடகா அரசு மேகதாது மற்றும் ராசிமணல் பகுதிகளில் 2 புதிய அணைகள் கட்டதிட்டமிட்டுள்ளது. இதை எதிர்த்து காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன”.
“இதுமட்டுமின்றி கர்நாடக அரசு 2 அணை மட்டும் அல்ல. மேலும் 5 அணைகள் கட்ட திட்டமிட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் வராது. இது அரசியல் பிரச்சனை அல்ல. ஒட்டுமொத்த தமிழ்மக்களின் பிரச்சனை”.
“கர்நாடகத்தில் பல்வேறு அணைகள் கட்டிய போது அதனை தடுக்க தமிழகம் தவறி விட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமை உணர்வுடன் திரண்டு வந்து ஒன்றாக போராட வேண்டும்”.
“முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையை விட காவிரி நீர் பிரச்சனை 100 மடங்கு ஆபத்தானது. இந்த காவிரி நீர் பிரச்சனையால் 12 மாவட்டங்கள் பாதிக்கும். மக்களின் குடிநீர் பாதிப்படையும். 3 கோடி விவசாய மக்கள் பாதிப்படைவார்கள்.”
“இதை விட ஆபத்து தமிழகத்துக்கு எப்போதும் நேராது. எனவே தமிழக மக்கள் திரண்டு வந்து போராட வேண்டும். இல்லாவிட்டால் நமது வருங்கால சந்ததி பெரும் அழிவை சந்திக்கும் என வைகோ கூறினார்.