பாகிஸ்தான், நவம்பர் 25 – அணு ஆயுத தயாரிப்பில் பாகிஸ்தான் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. உலக அளவில் அணு ஆயுத திட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக பாகிஸ்தான் மாறி வருகிறது.
2020 ஆம் ஆண்டுக்குள் அந்நாடு, 200 அணு ஆயுதங்களை தயாரிக்க கூடிய மூலப் பொருட்களை சேகரித்து வைத்துள்ளதாக அமெரிக்காவின் வெளிவிவகாரங்களுக்கான ஆணையம் கூறியுள்ளது.
மேலும் அதன் அறிக்கையில், உலகின் பல நாடுகளில் அணு ஆயுதங்களை குறைக்க வலியுறுத்தப்பட்டு வந்த போதிலும், ஆசியாவில் மட்டும் அணு ஆயுத பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் அணு ஆயுத தயாரிப்பில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக உருவெடுத்துள்ளது.
இந்தியா, 90 முதல் 110 அணு ஆயுதங்களை தயாரிக்க தேவையான மூலப்பொருட்களையும், சீனா நடுத்தர, இடை நிலை மற்றும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட 250 அணு ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆயுதங்களை என்ன காரணத்துக்காக வைத்திருக்கிறோம் என்று பாகிஸ்தான் அதிகாரபூர்வமாக எதுவும் கூறவில்லை. ஆனாலும், இந்தியாவின் அச்சுறுத்தலை தடுக்கவே இவற்றை வைத்திருப்பதாக பாகிஸ்தான் சூசகமாக உணர்த்தி உள்ளது.
மேலும், இந்த ஆயுதங்கள், தீவிரவாதிகள் கைக்கு போவதை தடுக்கவும், அமெரிக்கா படையெடுக்கும் ஆபத்தை தவிர்க்கவும் பாகிஸ்தான் இந்த ஆயுதங்களை வைத்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.