புது டெல்லி, டிசம்பர் 3 – இந்தியாவில் திறன்பேசிகளுக்கான சந்தை அதிவேகமாக வளர்ந்து வருகின்றது. முன்னணி நிறுவனங்களின் திறன்பேசிகளை விட சிறு நிறுவனங்களின் மலிவு விலை திறன்பேசிகளின் வர்த்தகம் உச்சத்தை எட்டி உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 53 மில்லியன் திறன்பேசிகள் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறித்து வர்த்தக ஆராய்ச்சி நிறுவனமான ஜிஎப்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் 200 மில்லியன் செல்பேசிகள் விற்பனை செய்யப்படும். அவற்றில் திறன்பேசிகளின் எண்ணிக்கை 53 மில்லியன்கள் ஆகும். இதன் மூலம் செல்பேசிகளின் மொத்த விற்பனை மதிப்பு 75,000 கோடியாக உயர்வதற்கு வாய்ப்புள்ளது. அவற்றில் திறன்பேசிகளின் வர்த்தகம் மட்டும் 52,000 கோடி” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், சுமார் 147 மில்லியன் செல்பேசிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. அவற்றில் திறன்பேசிகளின் எண்ணிக்கை மட்டும் 30 மில்லியன்கள் ஆகும்.
இந்தியாவில் பயனர்கள் சாதாரண செல்பேசிகளில் இருந்து திறன்பேசிகளுக்கு அதிவேகமாக மாறி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய வர்த்தகத்தில் 2014-ம் ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டுகளில் சாம்சுங் நிறுவனம் 34.2 சதவீத விற்பனையும், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் 17.9 சதவீத விற்பனையும், நோக்கியா 16.3 சதவீத விற்பனையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.