திருச்சி, டிசம்பர் 3- அண்மையில் புதிய கட்சி தொடங்கியுள்ள அமரர் மூப்பனாரின் மகனும், தமிழக காங்கிரசின் முக்கிய தூண்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன், தனது புதிய கட்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.
காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து விலகிய ஜி.கே.வாசன், கடந்த நவம்பர் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருச்சியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் புதுக்கட்சியின் பெயரை அறிவித்தார். அவரது ஆதரவாளர்கள் பெரிதும் எதிர்பார்த்தபடியே புதுக்கட்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஜி.கே.வாசனின் தந்தையும் மறைந்த தலைவருமான ஜி.கே.மூப்பனார் முன்பு காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து வந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தார். அந்தக் கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்தும் அப்போது ஆதரவு கொடுக்க அதன் மூலம் கருணாநிதி தலைமையிலான திமுக, ஜெயலலிதாவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
மூப்பனாரின் மறைவுக்குப் பின்னர் அக்கட்சியின் தலைமையை ஏற்றுக் கொண்ட வாசன் பின்னர் அந்தக் கட்சியை காங்கிரசுடன் இணைத்தார் .
தற்போது மீண்டும் அந்தக் கட்சிக்கு உயிரூட்டியுள்ளார் வாசன். திருச்சியில் கொட்டும் மழையில் நடைபெற்ற கட்சியில் தொடக்கக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது கட்சியின் சின்னம் சைக்கிள் என்பதையும் அறிவித்தார் ஜி.கே.வாசன்.
இனி 2016ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியுடன் தமாகா சேரும், என்பதுதான் தமிழக அரசியல் வட்டாரங்களில் தற்போது எழுந்துள்ள கேள்வி.
வாசனின் விலகலால் காங்கிரஸ் பலத்த சரிவைச் சந்தித்துள்ளது என்ற கருத்து ஒரு புறம் இருந்தாலும், தமாகாவின் உதயத்தால் காங்கிரசின் வாக்கு வங்கி பெரிதாகப் பாதிக்கப்படவில்லை என்ற ஒருகருத்தும் நிலவுகின்றது.