வாஷிங்டன், டிசம்பர் 3 – உலக அளவில் பல்லாயிரம் உயிர்களை பலி வாங்கிய எபோலா நோய்க்கான தடுப்பு மருந்தின், முதல் கட்ட சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் எபோலாவை மனிதர்களிடையே பரவாமல் தடுக்க முடியும் என்ற நம்பிக்கை மருத்துவர்களிடையே ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய தொற்று நோய் அறிவியல் மையம் மற்றும் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனமான கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து எபோலா நோய் தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தன.
ஒருகட்டத்தில் உருவாக்கப்பட்ட மருந்தினை 20 ஆரோக்கியமான நபர்களின் உடலில் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவர்கள் உடலில் அந்த மருந்து தேவையான எதிர்ப்பு சக்தியை உருவாக்கியது.
இது குறித்து, அமெரிக்காவின் தேசிய தொற்று நோய் அறிவியல் மையத்தின் இயக்குநர் ஆன்டனி ஃபாக்கி கூறுகையில், “உலக அளவில் எபோலா மிகத் தீவிரமாக பரவி வருகின்றது. இந்த புதிய மருந்தின் மூலம் வருங்காலத்தில் இது போன்ற நிலை உருவாகாமல் தடுக்க முடியும். முதல் கட்ட சோதனையில், இந்த தடுப்பு மருந்து மனித உடலில் போதுமான எதிர்ப்பு சக்தியை உருவாக்கியது. முதற்கட்ட வெற்றியின் அடிப்படையில் இந்த மருந்தினை பரவலான அளவில் பரிசோதிக்க முயற்சித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
இந்த ஆய்வு பற்றிய முழுவிவரம் ‘நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்’ (new england journal of medicine) எனும் ஆய்வேட்டில் வெளியாகியுள்ளது. எனினும், இந்த மருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது