சென்னை, நவம்பர் 28 – ரஜினி அரசியலுக்கு வருவதற்கு என்ன தகுதி இருக்கிறது என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் நடந்த விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “ரஜினியை பலரும் அரசியலுக்கு அழைக்கிறார்கள். மக்களுக்காக போராடிய நல்லக்கண்ணு, நெடுமாறன் ஆகியோருக்கு இல்லாத தகுதி அப்படி ரஜினி இடத்தில் என்ன இருக்கிறது?”
“நம் மண்ணிற்காக, தமிழ் மொழிக்காக, இயற்கையை காக்க தங்கள் வாழ்க்கையை அற்பணித்த பலர் இருக்கையில் எதற்காக ரஜினியை முன்னிறுத்துகிறார்கள். அதை ஆதரிக்கவும் ஆட்கள் உள்ளனர். இந்த தமிழ் சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?”.
“ரஜினி மக்களுக்காக ஏதாவது ஒரு விஷயத்திலாவது உறுதியாக இருந்துள்ளாரா? அரசியலுக்கு அவர் வரட்டும் பார்த்துவிடலாம். அவர் தனியாக வந்தாலும் சரி, கூட்டணி வைத்து வந்தாலும் சரி. தேர்தல் வரட்டும் பிரபாகரனின் தம்பிகளா? அல்லது ரஜினி ரசிகர்களா? என்று பார்த்துவிடலாம்” என பேசியுள்ளார் சீமான்.
மேலும் தானும் தனது கட்சியினரும் பிரபகரனின் தொண்டர்கள் என்றும் அவரது வழியை தான் பின்பிற்ற போகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.