லண்டன், டிசம்பர் 3 – உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம், அணு ஆயுதங்களைத் தயாரிக்க உதவும் கதிர் வீச்சுப் பொருட்கள் கிடைத்திருப்பதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த செய்தி உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் ஊடகங்களில் வெளியான செய்திக் குறிப்பில், “கடந்த ஆகஸ்ட் மாதம் ஈராக்கின் மொசூல் நகரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் கைப்பற்றியபோது, அந்த நகரிலுள்ள பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் இருந்து கதிர் வீச்சுப் பொருட்களை அவர்கள் கைப்பற்றியதாகத் தெரிய வருகின்றது.”
“இது குறித்து அந்த அமைப்பில் இணைந்துள்ள பிரிட்டன் வெடிகுண்டு நிபுணர் ஹமாயூன் தாரிக், சமூக வலைதளங்களில் தங்களிடம் கதிர் வீச்சுப் பொருள் சிக்கியிருப்பதாகவும், அதனைக் கொண்டு அணு ஆயுதங்களைத் தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
“ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரும், தாங்கள் அணு ஆயுதம் ஒன்றைத் தயாரித்துள்ளதாக வலைதளங்களில் கூறியுள்ளனர். ஒருவேளை அவர்களிடம் அணு ஆயுதம் இருந்தாலும், அதனை மேற்கத்திய நாடுகளுக்கு எடுத்துச் சென்று வெடிக்கச் செய்ய வாய்ப்பில்லை. ஈராக் அல்லது சிரியாவில் மட்டுமே அதனை பயன்படுத்த முடியும்” என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.