கனோ, டிசம்பர் 4 – நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள், கடந்த திங்கட்கிழமையும் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், அந்தத் தாக்குதலில் இதுவரை 150-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
நைஜீரியாவின் கனோ நகரில் உள்ள மசூதியில் கடந்த வாரம் போகோ ஹரம் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட இரட்டைக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பொதுமக்கள் 100 பேர் பலியாகினர். இந்நிலையில் அந்த அமைப்பினர், நைஜீரியாவின் வடகிழக்கு பகுதிகளில் அமைந்த டமாடுரு நகரில் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிய வருகின்றது.
இது குறித்து அந்நாட்டு காவல் துறையின் செய்தி தொடர்பாளர் இம்மானுவேல் ஒஜக்வூ கூறுகையில், “திங்கட்கிழமை டமாடுரு நகரில் போகோ ஹரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் நகரில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் 115 உடல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.”
“அவர்கள் பொதுமக்களா அல்லது ஊடுருவல்காரர்களா என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை. எனினும், 115 பேரும் சாதாரண குடிமக்கள் போன்ற தோற்றத்தில் உள்ளனர். இந்தத் தாக்குதலில் இரு மருத்துவர்கள், கல்லூரி ஊழியர்கள் மற்றும் இரண்டு குழந்தைகளும் அடங்குவர். மேலும், நைஜீரிய இராணுவத்தைச் சேர்ந்த 6 வீரர்களும், 38 காவல்துறையினரும் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார்.
கூட்ட நெரிசல் நிறைந்த பகுதியில் தீவிரவாதிகள் திட்டமிட்டு இந்த துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளதாக இராணுவத்தின் முக்கிய அதிகாரி தெரிவித்துள்ளார். உயிர் இழந்தவர்களில் பலர் கூட்ட நெரிசல் காரணமாகவே இறந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.