கோலாலம்பூர், டிசம்பர் 8 – மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிற்கு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமனம் செய்தது போல், நாட்டின் பிரதமர் பதவிக்கும் வெள்ளைக்காரர் (ஓராங் பூத்தே) ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என முன்னாள் பிரதமர் மகாதீர் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
“நான் கவலையடைகின்றேன். நம் மீது நமக்கு நம்பிக்கை இல்லையென்றால், ஒருநாள் நமக்கு பிரதமர் பதவிக்குக் கூட ஒரு வெள்ளைக்காரர் தேவைப்படுவார். காரணம் நம்மை விட அவர்கள் திறமைசாலிகள்” என்று புத்ராஜெயாவில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மகாதீர் தெரிவித்துள்ளார்.
“இதற்காக மக்கள் ஆத்திரமடைவார்கள் என்றால் அடையட்டும். ஆனால் இது தான் என்னுடைய கருத்து” என்றும் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
மாஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிற்கு, ஐயர்லாந்து தேசிய விமான நிறுவனமான ஐயர் லிங்கஸ்-ன் தலைவரான கிறிஸ்டோப் முல்லரை நியமனம் செய்யப் போவதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது.
அது குறித்து கருத்துக் கூறியிருந்த மகாதீர், மலேசியர்கள் விமான சேவையை நிர்வகிப்பதில் முட்டாள்தனமாக செயல்படுகின்றனர் என்று குற்றம்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.