இலண்டன், டிசம்பர் 11 – உலகிலேயே மிக நீண்ட காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் ஆங்கிலப் படத் தொடர் ஜேம்ஸ்பாண்ட். 1961ஆம் ஆண்டு தொடங்கி இப்போது வரையில் பல்வேறு நடிகர்கள் அந்தப் பாத்திரம் ஏற்று நடித்துள்ளனர். எப்போது வெளியிடப்பட்டாலும் வசூலைக் குவிக்கும் அம்சங்கள் கொண்ட ஜேம்ஸ்பாண்ட் மீண்டும் வருகின்றார், ‘ஸ்பெக்டர்’ (Spectre) என்ற புதிய படத்தின் மூலம்!
இதற்கு முன்பு மூன்று படங்களில் ஜேம்ஸ்பாண்ட் 007 என்ற துப்பறியும் இரகசியக் காவல் துறை அதிகாரியாக நடித்த பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கிரெய்க்தான் இந்தப் படத்திலும் கதாநாயகன்.
அவரோடு இணைகின்றார்கள் புதிய இரண்டு கதாநாயகிகள். இத்தாலிய நடிகை மோனிகா பெல்லுச்சி (Monica Bellucci வலது) பிரெஞ்சு நடிகை லியா செய்டூ ( Lea Seydoux) ஆகிய இருவரும்தான் புதிய ஜேம்ஸ்பாண்ட் பட நாயகிகள்.
பல ஆங்கிலப் படங்களில் கவர்ச்சிக் காட்சிகளில் உலா வந்திருக்கும் முன்னணி நடிகை மோனிக்கா பெல்லுச்சி புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்திற்காக இலண்டனில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அளித்த தோற்றம்.
இந்தப் படம் அடுத்தாண்டு அக்டோபர் 23ஆம் தேதி உலகமெங்கும் திரையிடப்படும்.
ஜேம்ஸ்பாண்ட் படம் என்றாலே விதம் விதமான வித்தியாச அழகுத் தோற்றம் கொண்ட பல்வேறு நாட்டு நடிகைகள்தான் அதன் சிறப்பம்சம். அடுத்து வரும் புதிய ஜேம்ஸ்பாண்ட் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. இங்கு டேனியல் கிரெய்க்குடன் காட்சி தருபவர் புதிய படத்தின் மற்றொரு கதாநாயகி பிரிட்டிஷ் நடிகை நௌமி ஹாரிஸ்.
ஆக மூன்று கதாநாயகி நடிகைகளுடன் அடுத்தப் படத்தில் கலக்கப் போகின்றார் ஜேம்ஸ்பாண்ட்.
ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்துடன் எப்போதும், எல்லாப் படங்களிலும் ஏதாவது ஒரு கார் கதையோடு இடம் பெற்றிருக்கும். புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தில் தோன்றவிருக்கும் ஆஸ்டன் மார்ட்டின் டிபி 10 (Aston Martin DB10) ரக இந்தக் காரும் இலண்டனில் நடைபெற்ற படத்துக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய ஜேம்ஸ்பாண்ட் படமான ஸ்பெக்டர் படத்தை இயக்கப்போகும் பிரிட்டிஷ் இயக்குநர் சேம் மெண்டிஸ் இவர்தான். வசூலை வாரிக் குவித்த முந்தைய ஜேம்ஸ்பாண்ட் படமான ‘ஸ்கைஃபோல்’ (Skyfall) படத்தையும் இவர்தான் இயக்கியிருந்தார்.
ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வழக்கமாக எடுக்கப்படும் இலண்டனின் பைன்வுட் ஸ்டுடியோஸ் அரங்கில் ஸ்பெக்டர் திரைப்படக் குழுவினருடன் நடுநாயகமாக கதாநாயகன் டேனியல் கிரெய்க்.
படத்தில் வலது கோடியில் காணப்படுபவர் நடிகர் கிரிஸ்டோப் வால்ட்ஸ் என்ற ஜெர்மன் நாட்டு நடிகராவார். ஏற்கனவே, பல படங்களில் சிறப்பாக நடித்து சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதையும் இவர் பெற்றிருக்கின்றார்.
படங்கள்: EPA