வாஷிங்டன், டிசம்பர் 15 – ரஷ்ய அதிபர் புதினின் இந்திய சுற்றுப்பயணம், அமெரிக்காவிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கடந்த வாரம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட புதின், இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்து, இந்திய-ரஷ்ய உறவை வலுப்படுத்த பல்வேறு ஆலோசனைகளை நடத்தினார். மேலும், அடுத்த 20 ஆண்டுகளில் செயல்படவிருக்கும் எண்ணெய் ஆய்வு, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் அணு உலைகள் போன்ற இந்திய-ரஷ்ய திட்டங்களைப் பற்றியும் அறிக்கைகளை வெளியிட்டார்.
இந்த சந்திப்புக்கு முன்னரே, அமெரிக்க அதிபர் ஒபாமாவை ஜனவரி மாதம் 26-ம் தேதி நடைபெற இருக்கும் இந்திய குடியரசு தின அணிவகுப்பிற்கு தலைமையேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், இந்திய-ரஷ்ய உறவால் ஒபாமாவின் இந்திய வருகை பாதிக்கப்படும் என்ற கருத்து நிலவி வந்தது.
ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தக உறவு அமெரிக்காவிற்கு அதிருப்தி அளிப்பதாக இருந்தாலும், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதென்றும் அமெரிக்க அரசுத்துறை செய்தியாளர் சாகி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
“இந்திய-அமெரிக்க பொருளாதார உறவு, இரு நாட்டு உறவு நீடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். எனினும், இந்திய-ரஷ்ய நடவடிக்கைகளை அமெரிக்கா கவனித்து வருகிறது. மேலும், ரஷ்யாவுடன் வணிக உறவு வைத்துக் கொள்ளக்கூடாதென அனைத்து நாடுகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்தியா, ரஷ்யாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்தி வருவது கவலை அளிக்கின்றது” என்று அவர் கூறியுள்ளார்.