Home உலகம் ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தல்: அபே மீண்டும் வெற்றி என கணிப்பு!

ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தல்: அபே மீண்டும் வெற்றி என கணிப்பு!

709
0
SHARE
Ad

டோக்கியோ, டிசம்பர் 15 – ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய பிரதமர் சின்சோ அபே கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Shinzo Abe 300 x 200
சின்சோ அபே

ஜப்பான் பிரதமராக கடந்த 2012–ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்த சின்சோ அபே, அங்கு நாடாளுமன்றத் தேர்தல் நடத்த இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து திடீர் தேர்தலைக் கொண்டு வந்தார். இதில் சின்சோ அபே தலைமையிலான விடுதலை ஜனநாயக கட்சி கூட்டணியும், பிரதான எதிர்கட்சியான ஜப்பான் ஜனநாயக கட்சி கூட்டணியும் அதிகாரத்தை கைப்பற்ற போட்டியிட்டன.

நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 4.30 மணிக்கு முடிந்தது. நாட்டின் பல பகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தபோதிலும் சில இடங்களில் ஓட்டுப்பதிவு மந்தமாகவும் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

எனினும் தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்தவர்களிடம் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பின்படி சின்சோ அபேவின் விடுதலை ஜனநாயக கட்சி கூட்டணிக்கு 300–க்கும் அதிகமான தொகுதிகள் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் அபேயின் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவது உறுதி என்று கூறப்படுகிறது. இந்த வெற்றியின் மூலம் அபே 2018–ம் ஆண்டு வரை தொடர்ந்து பிரதமர் பதவி வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அபே கட்சிக்கு பெரும் வெற்றி கிடைக்கும் பட்சத்தில் பொருளாதார சீர்திருத்த கொள்கைகளில் அவர் சுதந்திரமாக செயல்படுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.