திருவனந்தபுரம், டிசம்பர் 16 – சபரிமலை ஐயப்பன் கோயிலில், 28 நாட்களில் மொத்த வருமானம் ரூ.98 கோடியை தாண்டியது. இது கடந்த ஆண்டைவிட ரூ.13 கோடி அதிகமாகும். மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 16-ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது.
இந்த ஆண்டு நடை திறந்தது முதல் பக்தர்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் நடை திறந்த சில தினங்களில் 10 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.
பக்தர்களின் வருகை அதிகரித்ததை தொடர்ந்து, சபரிமலையில் தரிசன நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 4 மணிக்குப் பதிலாக 1 மணி நேரம் முன்னதாக 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் சபரிமலை கோயில் வருமானமும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் (14-ஆம் தேதி) வரை கோயில் மொத்த வருமானம் ரூ.98 கோடியை தாண்டி உள்ளது.
கடந்த வருடம் இதே நாளில் ரூ.85 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தது. அரவணை பாயசம் மூலம் ரூ.39.50 கோடியும், உண்டியல் மூலம் ரூ.35 கோடியும்,
அபிஷேகம் மூலம் ரூ.1.10 கோடியும், அப்பம் விற்பனை மூலம் ரூ.7.35 கோடியும் வருமானம் கிடைத்துள்ளது. இன்று அல்லது நாளை கோயில் மொத்த வருமானம் ரூ.100 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.