சான் பிரான்சிஸ்கோ, டிசம்பர் 17 – கூகுள் நிறுவனம் ஆண்டுதோறும், தனது தேடு பொறியில் அதிகம் தேடப்பட்ட மனிதர்கள் தொடர்பான பட்டியலை வெளியிட்டு வருகின்றது.
அந்த வகையில், 2014-ம் ஆண்டிற்கான அதிகம் தேடப்பட்ட மனிதர்கள் பட்டியலை அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் அமித் ஷிங்கல் வெளியிட்டுள்ளார்.
அந்த பட்டியலில், ஆஸ்கார் விருது வென்ற அமெரிக்க நடிகர் ராபின் வில்லியம்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி கலிபோர்னியாவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட அவரின் மரணம் தொடர்பான செய்தி, இந்த ஆண்டு உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகையே தன் திறமையால் ரசிக்க வைத்த ராபின் வில்லியன்ஸ், காலத்திற்கும் நிலைத்து நிற்கும் நிகழ்ச்சிகளையும், பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களையும் நமக்கு அளித்துச் சென்றுள்ளார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து நாட்டு மக்களும் ரசித்த ‘ஜீமான்ஜி’ திரைப்படம் அவரது திறமைக்கு ஒரு சிறு எடுத்துக்காட்டாகும்.
அவரைத் தொடர்ந்து கூகுள் தேடலில், உலகக் கோப்பை கால்பந்து, எபோலா இரண்டும் பயனர்களால் அதிகம் தேடப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் மலேசியன் ஏர்லைன்ஸின் இரு பெரும் பேரிடர்களும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.