Home உலகம் தீவிரவாத இயக்கங்களை முற்றிலும் அழிக்க நவாஸ் ஷெரீப் சபதம்!

தீவிரவாத இயக்கங்களை முற்றிலும் அழிக்க நவாஸ் ஷெரீப் சபதம்!

467
0
SHARE
Ad

nawaz-sharif-1இஸ்லாமாபாத், டிசம்பர் 18 – பாகிஸ்தானில் தீவிரவாத இயக்கங்கள் முற்றிலும் அழிப்பது குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டிய அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீப், தலிபான்களை வேரறுக்கும் வரை பாகிஸ்தான் இராணுவம் ஓயாது என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள இராணுவப் பள்ளியில் நேற்று முன்தினம் புகுந்த தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்க தீவிரவாதிகள் அந்த பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 132 பள்ளிக்குழந்தைகள் உள்பட 145 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் பல குழந்தைகள் படுகாயமடைந்த நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தலிபான்களின் அட்டூழியத்தை ஒடுக்க அனைத்துக் கட்சி அவசர ஆலோசனைக் கூட்டத்தை பிரதமர் நவாஸ் ஷெரிப் நேற்று கூட்டினார்.

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் குர்ஷித் கான் மற்றும் தெஹ்ரிக் இ இன்ஸாப் கட்சி தலைவர் இம்ரான்கான் உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் நவாஸ் ஷெரிப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடைசி தீவிரவாதியை அழிக்கும் வரை தீவிரவாதத்துக்கு எதிரான அரசின் தாக்குதல் தொடரும்.

இதனை மேலும் தீவிரமாக்குவது தொடர்பாக பரிந்துரைக்க உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் இடம் பெறும் தேசிய செயல்திட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பெஷாவர் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் மரண தண்டனையை தடை செய்யும் திட்டத்தை திரும்பப்பெற அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து நிருபர்கள், நவாஸ் ஷெரிப்பிடம் கேட்டதற்கு, “மரண தண்டனை ரத்து விவகாரத்தில் தீவிரவாதிகளுக்கு மட்டும் விலக்கு அளிப்பது பற்றி முடிவு செய்ய வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகளை தண்டிக்கவில்லை எனில், வேறு யாரை தண்டிப்பது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.