சென்னை, டிசம்பர் 19 – சிவாஜிகணேசனுக்கு சொந்தமான ‘சாந்தி’ திரையரங்கம் இன்னும் 3 மாதங்களில் இடிக்கப்படுகிறது. அந்த இடத்தில், நான்கு நவீன திரையரங்கங்களுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்படுகிறது.
சென்னை நகரை அலங்கரித்த வெலிங்டன், சித்ரா, அலங்கார், ஆனந்த், சபையர், புளூடைமண்ட், எமரால்டு, கெயிட்டி, பாரகன், சன், ராஜகுமாரி உள்பட பல திரையரங்கங்கள் இடிக்கப்பட்டு, வணிக வளாகங்களாகவும், அடுக்கு மாடி குடியிருப்புகளாகவும் மாறிவிட்டன.
அதேபோல் சென்னை நகரின் அடையாளங்களில் ஒன்றான ‘சாந்தி’ திரையரங்கமும் இடிக்கப்படுகிறது. இன்னும் மூன்று மாதங்களில் அந்த திரையரங்கம் இடிக்கப்பட உள்ளது. அந்த இடத்தில், 4 நவீன திரையரங்கங்களுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்படுகிறது.
சாந்தி திரையரங்கம் 53 வருடங்களுக்கு முன்பு ஜி.உமாபதியால் கட்டப்பட்டது. இவர், சிவாஜிகணேசன் நடித்த ‘ராஜராஜ சோழன்’ படத்தை தயாரித்தவர். இவருக்கு சொந்தமாக சென்னை அண்ணாசாலையில், ‘ஆனந்த்’ என்ற திரையரங்கம் இருந்தது.
1962-ம் வருடம் சாந்தி திரையரங்கம் ஜி.உமாபதியிடம் இருந்து நடிகர் சிவாஜிகணேசன் வாங்கினார். அன்று முதல் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் அனைத்தும் சாந்தி திரையரங்கிலேயே திரையிடப்பட்டன. 2005-ம் ஆண்டு சாந்தி திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டது. சாந்தி, சாய்சாந்தி என 2 திரையரங்கங்களாக மாற்றப்பட்டது.
இப்போது, சாந்தி திரையரங்கத்தை இடித்து விட்டு, அந்த இடத்தில் 4 நவீன திரையரங்கங்களுடன் கூடிய வணிக வளாகம் கட்ட முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கான வேலை இன்னும் 3 மாதங்களில் தொடங்க இருக்கிறது என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தனர்.