சென்னை, டிசம்பர் 19 – லிங்கா படத்தால் தங்களுக்கு ரூ. 20 கோடி முதல் ரூ.30 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக சில விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் நடித்து கடந்த 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெளியான திரைப்படம் லிங்கா.
இப்படத்திற்கு விநியோகஸ்தர்கள் எதிர்பார்த்தபடி வருமானம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பல விநியோகஸ்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில், திருச்சி, தஞ்சாவூர், தென் ஆற்காடு, வட ஆற்காடு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விநியோகஸ்தர்கள் தங்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறி தி.நகரில் உள்ள விஜய் பார்கவி என்டர்டயின்மென்ட் நிறுவனத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து, மெரினா பிக்சர்ஸ் உரிமையாளர் சிங்காரவேலன் கூறியதாவது;- “விஜய் பார்கவி என்டர்டயின்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பாலாவிஸ்வநாதனிடம் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 50 திரையரங்கின் விநியோக உரிமையை ரூ.8 கோடிக்கு வாங்கினேன்”.
“ஆனால் எதிர்பார்த்தபடி லிங்கா படம் வசூலை தரவில்லை. இதனால் எனக்கு ரூ.4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை அவர் தான் பெற்று தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.
இதேபோல இன்னும் பல விநியோகஸ்தர்கள் லிங்கா படக்குழு எங்களை ஏமாற்றிவிட்டனர் என்று புலம்புகின்றனர். மேலும் இந்த பிரச்னையில் ரஜினி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.