லாகோஸ், டிசம்பர் 19 – நைஜீரியாவில் தனியாட்சி அமைக்க ஆயுதப்போராட்டம் நடத்தி வரும் போகோ ஹரம் தீவிரவாதிகள், தங்கள் கொள்கைகளுக்காக அங்கு தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்கள் பலியாகும் நிலை அங்கு அடிக்கடி நடந்தேறி வருகின்றது.
இந்நிலையில், வடகிழக்கு நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் உள்ள கும்சுரி என்ற கிராமத்திற்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயுதங்களுடன் புகுந்த ஒரு கும்பல், 32 பேரை சுட்டுக்கொன்றதுடன் 185 பேரை கடத்தி சென்றுள்ளது.
தீவிரவாதிகளை எதிர்த்து போரிட அமைக்கப்பட்ட பொதுமக்கள் கூட்டு அதிரடிப்படையினரும் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் போகோ ஹரம் அமைப்பினர் என்று உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
போகோ ஹரம் தீவிரவாதிகள் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்திகளை மட்டுமே பிணையக் கைதிகளாக கடத்திச் செல்லுவர். அதே போன்று இந்த சம்பவத்திலும், அவர்களால் கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
இந்த வருடத்தில் மட்டும் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
தொலைத்தொடர்பு கோபுரங்களில் பாதிப்பு, குறைந்த தகவல் தொழில்நுட்பம் கருவிகள் போன்ற காரணங்களால் வெளி உலகத்திற்கு அவர்கள் படும் துயரங்கள் பெரும்பாலும் கால தாமதமாகவே தெரியவருகிறது.
எண்ணெய் வளமிக்க ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா போன்ற நாடுகளில் நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதல்களுக்கு உடனடியாக குரல் கொடுத்து வரும் உலக நாடுகள் வறுமையின் பிடியில் இருக்கும் நைஜீரியாவை கைவிட்டுவிட்டனவோ என்ற சந்தேகம் இது போன்ற தொடர் தாக்குதல்களால் ஏற்படுகின்றது.