கோலாலம்பூர், டிசம்பர் 21 – மாஸ் நிறுவனம் தனது 100-வது போயிங் 737 விமானத்தின் வரவை சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. இந்த விமானத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாஸிடம் ஒப்படைக்க போயிங் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மாஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் அகமட் ஜொஹாரி யாஹ்யா கூறுகையில், “போயிங் நிறுவனத்திடமிருந்து போயிங் 737 விமானத்தை முதன் முதலாக கடந்த 1972-ம் ஆண்டு மாஸ் நிறுவனம் வாங்கியது. அன்று முதல் இன்று வரை இந்த விமானங்கள் எங்களுக்கு மிகுந்த நம்பகத்தன்மையையும், சிறந்த பயன்பாட்டையும் அளித்து வருகின்றன.”
“100-வது விமானம் வரும் வெள்ளிக்கிழமை இங்கு வர இருப்பது, அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கின்றது. இரு நிறுவனங்களுக்கு இடையே உள்ள நீண்ட காலத் தொடர்பிற்கு இந்த விமானம் சான்றாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.
மாஸிடம் ஒப்படைக்க இருக்கும் 100-வது விமானம் குறித்து ஆசிய-பசிபிக் பகுதிக்கான போயிங் நிறுவனத்தின் துணைத் தலைவர் தினேஷ் கேஸ்கர் கூறுகையில், “மாஸ் நிறுவனத்துடன் நாங்கள் கொண்டுள்ள இந்த வர்த்தக உறவு எங்களுக்கு பெருமையை அளிக்கின்றது. குறிப்பாக 100-வது போயிங் விமானத்தை அங்கு ஒப்படைக்க இருப்பது பெரு மகிழ்ச்சியை கொடுக்கின்றது” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், “உலக அளவில் 5,100 போயிங்-737 விமானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மையை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதால், போயிங் விமானங்கள் குறைந்த இயக்கச் செலவுகளில் நிறைவான செயல்பாட்டினை கொடுக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.