Home இந்தியா அசாமில் கிராம மக்களை படுகொலை செய்த போடோ தீவிரவாதிகள்!  

அசாமில் கிராம மக்களை படுகொலை செய்த போடோ தீவிரவாதிகள்!  

606
0
SHARE
Ad

குவாஹாட்டி, டிசம்பர் 26 – இந்தியாவின் வட-கிழக்கு மாநிலமான அசாமில் போடோ தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல்களில் 65 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை, அசாமின் சோனித்பூர், கோக்ரஜார், சிராங் ஆகிய 3 மாவட்டங்களின் கிராமப் பகுதிகளில் புகுந்த போடோலாந்து தீவிரவாத அமைப்பின் சாங்பிஜித் பிரிவு தீவிரவாதிகள், அங்கு பூர்வீகக் குடிகளாக இருக்கும் ஆதிவாசி மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர்.

Assam Victims 25 dec 2014
பாதுகாப்பு முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ள பாதிக்கப்பட்ட அசாமிய மக்கள்

இந்த தாக்குதலில் சோனித்பூரில் 37 பேரும், கோக்ரஜாரில் 25 பேரும், சிராங்கில் 3 பேரும் பலியாகினர். அவர்களில், 40-க்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக அசாம் காவல்துறைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர்  கூறுகையில்,”கடந்த மாதம், அதிரடிப் படையினர் தீவிரவாதிகளை ஒடுக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பலியானவர்கள் அனைவரும் சோனித்பூர், கோக்ரஜார், சிராங் மாவட்டங்களைச் சேர்ந்த அப்பாவி பொது மக்கள்” என்று அவர் கூறியுள்ளார்.   .

தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதலைக் கண்டித்து, சோனித்பூர் மாவட்டம் தேகியாஜுலியில் உள்ள காவல் நிலையத்தை நோக்கி ஆதிவாசிகள் ஆயிரக்கணக்கோனோர் ஆயுதங்களுடன் பேரணி நடத்தினர். பேரணி சென்ற அவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால், காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டக்காரர்களை ஒடுக்கினர். இதில் போராட்டக்காரர்கள் 3 பேர் பலியாகினர், ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் இல்லங்களிலிருந்து வெளியேறி அரசு பாதுகாப்பு மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விரைவில் போடோ தீவிரவாதிகள் ஒடுக்கப்படுவர் என்று உறுதி அளித்துள்ளார்.