சென்னை, டிசம்பர் 18 – சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மீது, திரைப்பட விநியோகஸ்தரான ஐயப்பன் பண மோசடி புகார் அளித்துள்ளார். நேற்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் கலாநிதி மாறனுக்கு எதிராக அவர் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், “சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களின் விநியோக உரிமை பெற்று அதனை மற்ற விநியோகஸ்தர்களுக்கு தரும் வேலையை செய்து வந்தேன். அதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனக்கு 2 சதவீத கமிஷன் தொகையை தருவதாக ஒப்புக் கொண்டது. ஆனால், 17 படங்களுக்கான உரிமையை பெற்று மற்றவர்களுக்கு விற்றுள்ளேன். இதன் மூலம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு 400 கோடி செலுத்தினேன். ஆனால் அதில் எனக்கு சேர வேண்டிய கமிஷன் தொகையை அளிக்காமல் ஏமாற்றிவிட்டனர்.
எனக்கு சேர வேண்டிய 28.26 கோடி ரூபாயைக் கேட்டால், எனக்கு கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே, எனக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத் தர வேண்டும் என்றும், எனக்கும், குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கலாநிதிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் சிலர் தாக்கல் செய்துள்ள மனுவில், சன் குழுமத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட சக்சேனாவின் தூண்டுதலின் பேரிலேயே ஐயப்பன் பொய் புகார் அளித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.