கோலாலம்பூர், டிசம்பர் 28 – காணாமல் போன ஏர் ஆசியா இந்தோனிசியாவின் QZ 8501 வழித்தட எண் கொண்ட விமானத்தில் இருந்த 162 பேரில், பயணிகள் மொத்தம் 155 பேர் ஆவர். எஞ்சிய 7 பேர் பணியாளர்களாவர். அவர்களில் 2 விமானிகள், 4 பணியாளர்கள், 1 பொறியியலாளர் ஆகியோரும் அடங்குவர்.
பயணிகளில் 138 பேர் வயது வந்தவர்கள், 16 பேர் சிறுவ சிறுமியர், 1 கைக்குழந்தை ஆகியோர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 7.24 மணிக்கு விமானக் கட்டுப்பாட்டு நிலையத்தோடு தொடர்பை இழந்த இந்த ஏ320 -200 ஏர்பஸ் ரக, ஏர் ஆசியா விமானத்தின் நிலைமை என்னவாயிற்று என்று இன்னும் தெரியவில்லை.
நாடு வாரியாக விமானத்தில் இருந்தவர்களில்156 பேர் இந்தோனிசியர்கள், மூவர் தென் கொரியா நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர், ஒருவர் மலேசியர், மற்றும் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர் ஒருவர். மற்றொருவர் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர்.
மோசமான வானிலை காரணமாக, விமானி விமானத்தின் பாதையை மாற்றுவதற்கு அனுமதி கேட்டதாக ஏர் ஆசியா நிறுவனத்தின் அறிக்கை ஒன்று தெரிவித்தது.
இந்தோனிசியா நேரப்படிகாலை 5.35 மணிக்கு இந்தோனிசியாவின் சுரபாயா நகரின் ஜூவாண்டா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், உள்நாட்டு நேரப்படி காலை 8.30 மணிக்கு சிங்கப்பூர் வந்தடைய இருந்தது.
இந்த விமானத்தின் விமானி இதுவரை 6,100 மணி பயண நேரம் பணி சேவையில் இருந்துள்ளார் என்றும் துணை விமானி, 2,275 பயண நேரம் பணி சேவையில் இருந்துள்ளார் என்றும் ஏர் ஆசியா தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 16ஆம் தேதிதான் காணாமல் போன இந்த விமானத்தின் முழு பராமரிப்பு, இயந்திர சீரமைப்பு பணிகள் நடைபெற்றன என்றும் ஏர் ஆசியா அறிவித்துள்ளது.
இதற்கிடையில் விமானத்தைத் தேடும், மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஏர் ஆசியா ஓர் அவசர, நிவாரண மையத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் இருந்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள் +622 129850801 என்ற தொலைபேசி எண்ணில் இந்த அவசர மையத்துடன் தொடர்பு கொள்ளலாம்.