ஜாகர்த்தா, டிசம்பர் 29 – காணாமல் போன ஏர் ஆசியா விமானம் தொடர்பில் இந்தோனேசியாவுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய மலேசியா தயாராக உள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அறிவித்ததை அடுத்து, மலேசியக் கடற்படையைச் சேர்ந்த 3 கப்பல்கள் நேற்றிரவு தேடுதல் பணியில் இணைந்து கொள்ள ஜாவா கடல் பகுதிக்கு விரைந்துள்ளன.
சுரபாயாவின் ஜூவாண்டா விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அவசர நிலை மையத்தில் விமானம் இன்று தேடப்படும் பகுதிகளை அவசர மையத்தின் குழுவினர்கள் அடையாளமிட்டு வைக்கும் காட்சி….
அந்த கப்பல்களோடு ஹெலிகாப்டர் ஒன்றும் தேடுதல் பணிக்காக உடன் சென்றுள்ளது என்றும் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் தெரிவித்துள்ளார்.
மலேசிய விமானப் படைக்குச் சொந்தமான C-130 ரக விமானங்களும் தேடுதல் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் ஹிஷாமுடின் குறிப்பிட்டுள்ளார்.
விமானம் காணாமல் போன சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களுக்காக காத்திருப்பதாகக் குறிப்பிட்ட நஜிப், அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ரேடார் திரையில் இருந்து மாயமானது மட்டுமே தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று கூறினார்.
“இதன் மூலம் அந்த விமானத்திற்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கலாம் எனக் கருத முடிகிறது. தற்போது இத்தகவல் மட்டுமே எனக்குத் தெரியும். விமானத்திற்கு என்ன ஆனது என்பதைக் கண்டறிய தேவைப்படும் உதவிகளைச் செய்வோம்,” என செய்தியாளர்களிடம் பிரதமர் நஜிப் நேற்று தெரிவித்திருந்தார்.
ஜூவாண்டா விமான நிலையத்தில் குழுமியுள்ள பயணிகளின் உறவினர்கள் தங்களின் உயிருக்கு உயிரானவர்களின் படங்களோடு சோகத்தோடு காத்திருக்கின்றனர்.
ஆறு ஆண்டு காலம் பயன்பாட்டில் இருந்த ஏர் ஆசியாவின் அந்த ஏர்பஸ் ஏ320-200 ரக விமானத்தைத் தேடும் பணிகளில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இணைந்திருப்பதை அடுத்து, தற்போது 5 நாடுகள் கூட்டாக தேடுதல் வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ளன.
அமெரிக்காவும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் உதவி புரிவதற்காக தனது குழுக்களைத் தயார் நிலையில் வைத்துள்ளதாக சிஎன்என் தொலைக்காட்சி செய்தி ஒன்றில் தெரிவித்தது.
இந்தோனேசியாவின் தஞ்சோங் பண்டாங் பகுதியில் இருந்து தென் கிழக்கு நோக்கி 100 கடல் மைல்கள் தாண்டியுள்ள கடல் பகுதியில் பெலித்துங் தீவுப் பகுதியில் தேடுதல் பணிகள் மையமிட்டுள்ளன. இங்கேதான், கடைசியாக விமானத்தின் தொடர்பு விடுபட்டுப் போனதாகக் கருதப்படுகின்றது.
இதற்கிடையில் விமானம் கடலில் விழுந்து கடலுக்கு கீழே நீரில் அமிழ்ந்திருக்கலாம் என்றும் மற்றொரு உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவித்தது.
ஏர் ஆசியா விமானம் காணாமல் போனதைத் தொடர்ந்து சிங்கப்பூரிலுள்ள சாங்கி விமான நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆயுதம் தாங்கிய சிங்கப்பூர் பாதுகாப்புப் படையினர் சாங்கி விமான நிலைய வளாகத்தில் வலம் வருகின்ற காட்சி…
படங்கள்: EPA