லண்டன், ஜனவரி 1 – பிரிட்டனில் கடல் நீர்மட்டம் அதிகரிப்பால், கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் உட்பட சுமார் 7,000 கட்டிடங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வு அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பிரிட்டனில் கடல் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சுற்றுச் சூழல் பாதிப்புகளே இதற்கான காரணம் என்று கண்டறிந்துள்ள நிலையில், அடுத்த 20 ஆண்டுகளில் 800 கட்டிடங்களை கடல் நீர் முழ்கடித்து விடும் என்று கூறப்படுகின்றது.
கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் யார்க்ஷயர் முதல் கெண்ட் வரையிலுள்ள கடற்கரைப் பகுதிகளை மிகப்பெரிய இராட்சத அலைகள் தாக்கியதில் சுமார் 1,400 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் பல வீடுகள் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டன. இதனையடுத்து இது போன்ற நிலைமை மீண்டும் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
இதேபோல் கார்ன்வால் கடல்பகுதி, அடுத்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய அழிவை சந்திக்கும் என்று கூறப்படுகின்றது. கடந்த 50 ஆண்டுகளில் கார்ன்வாலில் மட்டும் சுமார் 132 வீடுகள் கடல் நீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.
மேலும் கிரேட் யார்மவுத்தில் சுமார் 293 வீடுகளும், சவுத்தாம்ப்டனில் சுமார் 280 வீடுகளும் கடல் நீர் மட்ட உயர்வினால் ஆபத்தை எதிர்நோக்க நேரிடும் என்றும் ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது.