மணிலா, டிசம்பர் 31 – பிலிப்பைன்ஸ் அனைத்துலக விமான நிலையம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை தரையிறங்கிய ஏர் ஆசியா செஸ்ட் நிறுவன விமானம் ஒன்று, ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்றதால் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
எனினும் ஓடுபாதைக்கு அருகே குவிந்திருந்த மணற்பகுதியில் சிக்கி அந்த விமானம் நின்றதால், அதில் பயணித்த 159 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதையடுத்து விமானத்தின் அவசரகால கதவுகள் திறக்கப்பட்டு, அதன் வழியே பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் விமானத்தின் 3 சக்கரங்கள் சேதமடைந்ததாகத் தெரிகிறது.
மணிலாவில் இருந்து மத்திய பிலிப்பைன்சில் உள்ள காலிபோ நகருக்கு வந்த ஏர்பஸ் 320-200 ரக விமானம், பயண நேரத்தின்போது எந்தச் சிக்கலையும் எதிர்கொள்ளவில்லை.
முன்னதாக இப்பகுதியில் வீசிய கடும் புயல் காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளச்சேதம் ஏற்பட்டு, 31 பேர் பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவில் ஏர் ஆசியா விமானம் கடலில் விழுந்து நொறுங்கிய நிலையில், அதையடுத்து மீண்டும் ஏர் ஆசியாவுக்கு சொந்தமான விமானம் பிலிப்பைன்சில் விபத்தைச் சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
படங்கள்: EPA