ஜாகர்த்தா, ஜனவரி 1 – கடலில் இருந்து மீட்கப்பட்ட ஏர் ஆசியா பயணியின் சடலம் ஒன்று உயிர் காக்கும் கவசத்துடன் (life jacket) காணப்பட்டதாக வெளியான தகவல் பல்வேறு கேள்விகளையும், சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது.
இந்தோனேசிய தேடுதல் மற்றும் மீட்புக் குழு ஒன்று இச்சடலத்தைக் கண்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் விமானம் கடலுக்குள் விழுவதற்கு முன்போ, அல்லது மூழ்குவதற்கு முன்போ, உயிர் காக்கும் கவசத்தை அணிவதற்கு பயணிகளுக்குப் போதுமான அவகாசம் இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
அதேசமயம், போதுமான அவகாசம் இருந்தும் விமானம் ஆபத்தில் உள்ளது என்பதற்கான எச்சரிக்கை குறிப்பை (சிக்னல்) விமானிகள் ஏன் தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பவில்லை எனும் கேள்வியும் எழுந்துள்ளது.
தேடுதல் மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த டாடாங் சைனுடீன் என்பவர், புதன்கிழமை காலை 4 பயணிகளின் சடலங்கள் கடலில் இருந்து மீட்டதாகவும், அதில் ஒரு சடலம் உயிர் காக்கும் பாதுகாப்பு கவசத்துடன் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஏர் ஆசியா தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ், “மாயமான விமானம் ஆழ்கடலில் புதைந்துள்ளது என்பதும், பயணி ஒருவரது சடலத்தில் உயிர் காக்கும் பாதுகாப்பு கவசம் இருந்ததா என்பதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை,” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் உயிர் காக்கும் பாதுகாப்பு கவசம் அணிந்திருந்த சடலம் ஏதும் மீட்கப்படவில்லை என்றும், கடலில் தனியே மிதந்து கொண்டிருந்த அக்கவசம் ஒன்று தனியாக மீட்கப்பட்டது என்றும் டாடாங் சைனுடீன் தெரிவித்ததாக மற்றொரு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து விமானம் விழப்போகும் இறுதி நிமிடங்களில் பயணிகள் உயிர் காக்கும் கவசம் அணியும்படி விமானிகள் பயணிகளுக்கு அறிவுறுத்தினரா, ஏன் அவ்வாறு அறிவிப்பு வெளியிடப்படவில்லை, விமானக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு ஏன் விமானிகள் உடனடியாக அவசரத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பது போன்ற கேள்விகளும், சர்ச்சைகளும் தகவல் ஊடகங்களில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.