கொழும்பு, ஜனவரி 3 – இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, தெரியாத தேவதையைக் காட்டிலும் தெரிந்த பிசாசே மேல் என்று கூறுவார்கள்.
நான் உங்களுக்கெல்லாம் தெரிந்தவன் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உருக்கமான பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
இலங்கை அதிபருக்கான தேர்தல் வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுக்க இராணுவத்தை ராஜபக்சே பயன்படுத்த உள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன.
இதனிடையே தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணப் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் ராஜபக்சே கூறியதாவது:- “தெரியாத தேவதையைக் காட்டிலும் தெரிந்த பிசாசே மேல் என்று கூறுவார்கள். நான் உங்களுக்கெல்லாம் தெரிந்தவன்.
எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் இந்தப் பகுதிக்கு அறிமுகம் இல்லாதவர். அதே நேரத்தில் நான் உங்களுக்கு எல்லாம் ஏற்கனவே நன்கு அறிமுகமானவன்.”
“உங்களூக்காக மின்சாரம் உள்பட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளேன். எனக்கு வாக்களிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெறலாம்” என்று கூறியுள்ளார்.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் ராஜபக்சேவின் கட்சியில் இருந்து சில முக்கிய அமைச்சர்கள் எதிர்கட்சிகளுக்கு தாவியுள்ளனர்.
தேர்தல் முடிவு தெரிந்ததால் தான் அவர்கள் கட்சி தாவல் செய்துள்ளதாக தகவல் வந்துள்ள நிலையில், தமிழர்களைக் கவர ராஜபக்சே இத்தகைய உருக்கமான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.